

செங்கல்பட்டு: மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான என்.வீரா (எ) வீராசாமி, ஒப்பந்ததாரரிடம் ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தவெகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் ஊராட்சியில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் நவீன், பணி முடிந்தும் பில் நிலுவையில் இருந்ததாகவும், அதை அனுமதிக்க வீரா முதலில் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொகை ரூ.1.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி கூகுள் பே மூலம் அனுப்பப்பட்டதுடன், மீதமுள்ள தொகையை நேரில் வழங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி.வி. தினகரன் (எ) தீனா, ஜூலை 15-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் வீரா (எ) வீராசாமி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
வீராசாமி மீது கடந்த 2023-ம் ஆண்டு ஊராட்சி நிர்வாக முறைகேடு தொடர்பாக வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்திருந்ததும், பின்னர் அவரது காசோலை கையொப்ப அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும், 2025-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் தலைவர் பதவியை இழந்த அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அண்மையில் மீண்டும் தலைவர் பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.