

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை காப்பதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பாமக தலைவர் அன்புமணி, முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் ‘சென்னையின் உயிர்நாடி பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காப்பதற்கான மக்கள் இயக்கம் - கையெழுத்து இயக்கம்’ என்ற பிரச்சாரத்தின் தொடக்க நிகழ்வு சென்னை தி.நகர் பாண்டிபஜாரில் நேற்று நடந்தது. பாமக தலைவரும், பசுமை தாயகம் அமைப்பின் ஆலோசகருமான அன்புமணி, பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி ஆகியோர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். அப்போது அன்புமணி பேசியதாவது:
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது. சென்னைக்கு 4 வரங்களை இயற்கை கொடுத்துள்ளது. அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 3 ஆறுகளும் சென்னைக்கு தண்ணீரை கொண்டு வருகிறது. 4 வது வரமான பள்ளிக்கரணை சதுப்பு நிலம், நீரை தேக்கி வைக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பு 15 ஆயிரம் ஏக்கராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், தற்போது 2,500 ஏக்கருக்கு வந்துவிட்டது. அதையும் அழிக்க அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள் சூழ்ச்சி செய்து வருகின்றன.
வேடந்தாங்கலைவிட 4 மடங்கு அதிக பறவைகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வருகின்றன. உங்கள் பிள்ளைகள், வருங்கால சந்ததிகள் சென்னையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். சென்னைக்கு வெள்ளம் வரக்கூடாது என்றால் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். வேளச்சேரி மொத்தமும் சதுப்பு நிலம். அதனால்தான் மழை காலங்களில் பாலங்களில் வாகனம் நிறுத்தும் நிலை உள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களால் நொந்து போய்விட்டோம். முதல்வர் விஜய் நேரடியாக தலையிட்டு சதுப்பு நிலத்தை பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலத்தை வரையறை செய்து அறிவிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்தால், சதுப்பு நிலத்தை ஆக்கிரமிக்க முடியாது. பெறப்படும் கையெழுத்துகளை முதல்வரிடமும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும் எடுத்துச் செல்வோம். பாமக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் வலியுறுத்தி பேசுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அன்புமணியும், சவுமியாவும் பாண்டிபஜாரில் உள்ள கடைகளுக்கு சென்று பொதுமக்களிடம் பள்ளிக்கரணை சதுப்புநில பாதுகாப்பு அவசியம் குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.