

சென்னை: சென்னை இஸ்கான் கோயிலின் 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து ரதத்தை இழுத்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் ‘இஸ்கான்’ கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 1981-ம் ஆண்டு முதல் பாரம்பரியமிக்க ஜெகந்நாதர் ரத யாத்திரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 46-வது ஆண்டு ஜெகந்நாதர் ரத யாத்திரை விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
வண்ண மலர்கள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான தேர், நீலாங்கரையில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. மதியம் 3 மணி அளவில் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி சிறப்பு அலங்காரத்தில் ரதத்தில் எழுந்தருளினர்.
மதியம் 3.30 மணி அளவில் மங்கல வாத்தியங்கள் முழங்க, ‘ஹரே கிருஷ்ணா’ கோஷமிட்டபடி திரளான பக்தர்கள், பொதுமக்கள் வடம்பிடித்து இழுக்க, ரத யாத்திரை தொடங்கியது. நீலாங்கரையில் தொடங்கிய ரத ஊர்வலம் வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாகச் சென்றது.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘ஹரிநாம சங்கீர்த்தனம்’ பாடி, தாளத்துக்கு ஏற்ப நடனமாடினர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த ஊர்வலத்தில் இணைந்து, சுவாமி தரிசனம் செய்து ரதத்தை இழுத்தனர்.
ரத யாத்திரை மீண்டும் அக்கரை இஸ்கான் கோயிலை வந்தடைந்ததும், சுவாமிக்கு மகா தீபாராதனை (ஆரத்தி) நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.