

சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று வரவேற்றார்.
சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் சென்னை மெட்ரோ 2-வது திட்டத்துக்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விளம்பர அரசியலில் ஈடுபடாமல், மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படுபவன் நான் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்துக்கு வருகை புரிந்து சென்னை மெட்ரோ 2-வது திட்டத்தின் வடபழனி- பூந்தமல்லி வழித்தடத்தை தொடங்கி வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்தில் மகிழ்ச்சியோடு வரவேற்றேன்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, எனது தலைமையிலான அதிமுக அரசு இருந்தபோது, இதற்கான டிபிஆர் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிபெற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டது.
மத்திய அரசின் நிதி வராத சூழலிலும், மாநில அரசின் நிதியை ஒதுக்கீடு செய்து, பணிகளை தொடக்கிய அன்றைய அரசு அதிமுக அரசு.
மேலும், பிரதமரை பல முறை நான் சந்தித்து மெட்ரோ திட்டத்துக்கு உரிய நிதியை விடுவிக்குமாறு கோரிய நிலையில், மத்திய அரசும் நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ரூ.63,246 கோடி நிதியை ஒதுக்க 2024-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம், வட பழனி- பூந்தமல்லி வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. அதிமுக ஆட்சியில் நாம் விதைத்த விதைகள், தற்போது வரை விருட்சமாவதைக் காண மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பழனிசாமி நினைத்திருந்தால் மெட்ரோ பாலத்தின் மீது கூலிங் கிளாஸ் போட்டு ஒரு போட்டோ ஷூட், சுரங்கப் பாதைக்கு அடியில் பாதுகாப்பு தலைக்கவசம் போட்டு ஒரு ரீல்ஸ் ஷூட்டிங் எடுத்திருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட ஏமாற்று அரசியலில் எனக்கு ஒருநாளும் உடன்பாடு இல்லை.
“நாம் பேசக் கூடாது. நம்முடைய செயல்கள்தான் பேச வேண்டும்” என்பதை எப்போதும் நம்புபவன் நான். யாருடைய ஆட்சி இருந்தாலும், நம்முடைய செயல்கள் தான் தமிழக மக்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்தை நமது திட்டங்கள் இன்றுவரை நமக்கு தந்துக்கொண்டு இருக்கின்றன.
இந்த இனிய தருணத்தில், தலைநகர் சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மெச்சத்தக்க பங்காற்றி வரும் சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.