நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: பழனிசாமி விமர்சனம்

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: பழனிசாமி விமர்சனம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: தமிழக காவல் துறைக்கு டிஜிபி நியமிக்கப்படாததால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த வாழ வந்தான்குப்பத்தில் அதிமுக சார்பில் மாவட்ட மகளிரணி எழுச்சி பொதுக்கூட்டம் மாவட்ட மகளிரணி தலைவர் அழகுவேல்பாபு தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: அடுத்து அமையப்போவது அதிமுக ஆட்சி என்பதற்கு இங்கு கூடியிருக்கும் மகளிர் கூட்டமே சாட்சி. அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை என சட்ட விரோத செயல்கள் நாள் தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது காவல்துறை. ஆனால் காவல்துறைக்கு நிரந்தர டிஜிபி இல்லாத காரணத்தினால் தலையில்லாத முண்டமாக தமிழக காவல்துறை காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் கள்ளக்குறிச்சிக்கு வந்திருந்த ஸ்டாலின், திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசி சவால் விட்டுச் சென்றுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக பரிந்துரைத்தவர் இந்த மாவட்டச் செயலாளர் குமரகுரு. அவரது பரிந்துரையை ஏற்று மாவட்டம் உருவாக்கப்பட்டது.

அதையடுத்து மாவட்டத்துக்கு மருத்துவக்கல்லூரி, மாவட்ட எல்லை சர்வதேச கால்நடை பூங்கா, இப்போது ஸ்டாலின் திறந்து வைத்த ஆட்சியர் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டியது அதிமுக ஆட்சி. நாம் பெற்ற பிள்ளைக்கு ஸ்டாலின் பெயர் வைத்திருக்கிறார். அதிமுக ஆட்சியில் சாலை, குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து, மக்களுக்கு இன்னல் இல்லாத ஆட்சியை தந்துவிட்டுச் சென்றோம்.

இப்போதும் மக்களுக்கு நல்ல திட்டங்களை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்து வருகிறோம். கடந்த தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என அறிவித்திருந்தோம்.

அதன்படி மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த காரணத்தினால் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டது. இனி எந்தக் காலத்திலும் குறையாது. அடுத்து அதிமுக ஆட்சி அமைந்ததும் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்தார்களா? 4-ல் ஒரு பங்குக் கூட செய்யவில்லை. இதுதான் திமுக அரசின் சாதனை. இவ்வாறு பழனிசாமி பேசினார். இக்கூட்டத்தில் அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அ.பிரபு, தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெ.அய்யப்பா, தியாகதுருகம் பேரூர் செயலாளர் பி.எஸ்.கே.ஆர். ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிரந்தர டிஜிபி நியமிக்கப்படவில்லை; பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை: பழனிசாமி விமர்சனம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 06 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in