

சென்னை: தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.
சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: இன்றைய தினம் காவல்துறை இக்கட்டான சூழலில் உள்ளது.
5 ஆயிரம் பெண் காவலர் உள்பட 10 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை போதாது. காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 667 ஆகும்.
தற்போது 1 லட்சத்து 18 ஆயிரத்து 851 பேர் பணியில் உள்ள நிலையில் 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. காவலர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்னரே அப்பணியிடங்களை கண்டறிந்து, தேர்வு நடத்தி தேவையான ஆட்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
தவெக அளித்த வாக்குறுதிப்படி காவலர்களின் அடிப்படை ஊதியத்தை ரூ.18,200-லிருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். காவலர்களின் நலனை மேம்படுத்திட காவலர் நலன் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
காவலர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சென்னை மாநகரில் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்களை காண்பித்தாலும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத பணத்தை போலீஸார் வட்டிக்கு விடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தகைய சம்பவங்கள் சென்னையி்ல் மட்டும்தான் நடந்துள்ளதா? அல்லது தமிழகத்தின் இதர பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காகத்தான் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.
இந்த ஆட்சியில் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தவெக ஆட்சிக்கு வந்து கடந்த 114 நாட்களில் விவ சாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள். நர்சுகள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.
அவர்களை அழைத்துப்பேசி பிரச்சினைக்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும். கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்து வருகின்றன. போக்சோ வழக்குகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.