

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் சொத்துகள், வாடகை பாக்கி உள்ளிட்ட அனைத்து முக்கிய விவரங்களையும் 3 மாதங்
களில் மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்று அறநிலையத் துறை ஆணையருக்கு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வாடகை விவரங்களைக் கோரி மு.ரவிசங்கர் என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார்.
உரிய தகவல் கிடைக்காததால் அவர் தொடர்ந்த 2-வது மேல்முறையீட்டு வழக்கு, மாநில தகவல் ஆணையர் விபிஆர் இளம்பரிதி முன்பு விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து அவர் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் அசையா சொத்துகளான தோப்புகள், விவசாய நிலங்கள், காலி மனைகள், குடியிருப்புகள், வணிகக் கட்டிடங்களின் முழு விவரங்கள், கட்டளை சொத்துகள், தற்போதைய குத்தகைதாரர்களின் பெயர்கள், குத்தகை முடியும் காலம், வாடகைதாரர் விவரம், நிலுவைத் தொகை போன்ற வற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
கோயில் வைப்பு நிதி, வங்கி விவரம், நிரந்தர சேமிப்புக் கணக்கு எண், உலோகப் பொருட்கள், நன்கொடைகள், வரவு - செலவு கணக்கு பதிவேடு, தணிக்கை அறிக்கை, அறங்காவலர் குழு தீர்மானங்களையும் வெளியிட வேண்டும்.
இதுதவிர, சேவைக் கட்டணங்கள், பணியாளர்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை கோயில்கள், அறநிலையத் துறை அலுவலக தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
இணையத்திலும் பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த ஆணை கிடைத்த 90 நாட்களுக்குள் இதை நடைமுறைப்படுத்த அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
உத்தரவு செயல்படுத்தப்பட்டது தொடர்பான ஆவணங்களுடன் துறையின் பொதுத் தகவல் அலுவலர் நவ.30-ம் தேதி ஆணையத்தில் ஆஜராகி அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.