“தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்” - எடப்பாடி பழனிசாமி

“தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்” - எடப்பாடி பழனிசாமி
Updated on
1 min read

சென்னை: “தவெக அரசு தாக்கல் செய்துள்ள முதல் பட்ஜெட், மக்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. பழைய திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தவெக அரசு முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. மக்கள் எதிர்பார்ப்பை இந்த அரசு பூர்த்தி செய்யவில்லை. மாற்றம் கொடுப்போம் என்று சொல்லி ஏற்கெனவே இருக்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.

வசனத்தைப் பேசியே காலத்தை ஓட்டுகிறார்கள். ரீல்ஸ், ரீல் விடுவதுதான் இந்த ஆட்சியின் சாதனையாக பார்க்கப்படுகிறது.

திமுக ஆட்சியைப் போல தவெக ஆட்சியிலும் புதிய குழுவை அமைத்து பெயர் வைத்துள்ளனர். எப்படி நிதி ஆதாரத்தை பெருக்க முடியும், அதற்கான வழிமுறைகளைக் கூட தெரிவிக்கவில்லை. ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருக்கிறது; அந்தக் கடனை அடைக்க என்ன வழி என சொல்லவில்லை.

முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற வாக்குறுதி ஏமாற்று வேலைதான். முழு பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு என்ன ஆனது?

இதுவரை தவெக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. பட்ஜெட்டில் எந்த ஒரு திட்டமும் முழுமையாக இடம்பெறவில்லை.

தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 10 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. திமுக அரசு கடனை வாங்கி எப்படி செலவு செய்தார்களோ, அதையே தவெக அரசு பின்பற்றுகிறது. பல்வேறு திட்டங்கள் தற்போது பெயர் மாற்றம் செய்து செயல்படுத்துகிறது.

கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது.கடனை அடைக்காமல், புதிய திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு எப்படி சாத்தியம்?

வருவாயே இல்லாத காலகட்டத்தில் கரோனா நேரத்தில் சிறப்பான ஆட்சி அதிமுக செய்தது. கரோனா காலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்டது. பேரிடர்களை துணிச்சலாக எதிர்கொண்டது அதிமுக அரசு.

லீக்கேஜ் என்று சொல்லித்தான் மக்களை ஏமாற்ற முடியும். முதலில் எந்தெந்த இடங்களில் லீக்கேஜ் உள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக இருக்கும் அதிகாரிகளுக்கு எங்கெங்கு லீக்கேஜ் உள்ளது என்பது தெரியாதா?

ஏதோ ஒரு காலச் சூழலில் வெற்றி பெற்றுவிட்டதால் ‘வெற்றி, வெற்றி’ என அனைத்து திட்டத்துக்கு பெயர் வைத்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டுக்கு பிறகு மக்கள் ஏன் வாக்களித்தோம் என சிந்திப்பார்கள். தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க் தான் தர வேண்டும். இதில் என்ன உள்ளது?” என்றார் எடப்பாடி பழனிசாமி.

“தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்” - எடப்பாடி பழனிசாமி
மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.7,000 ஆக உயர்வு: தமிழக பட்ஜெட் 2026-ல் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in