மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: பழனிசாமி கோரிக்கை

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

Updated on
1 min read

சென்னை: ‘காவிரி, மேகேதாட்டு பிரச்சினை குறித்து விவாதிக்க முதல்வர் விஜய், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கர்நாடக காங்கிரஸ் முதல்வர் கூறுவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரைப் பெற வேண்டிய தவெக – காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் இன்றுவரை மவுனம் காத்து வருகிறார். உச்ச நீதிமன்றம், 2012-ம் ஆண்டு காவிரிப் பிரச்சினை குறித்து மீண்டும் ஒருமுறை கர்நாடகாவோடு தமிழக முதல்வர் பேச வேண்டும் என்ற ஒரு யோசனையைத் தெரிவித்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக அரசோடு பேசிப் பயனில்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று கர்நாடக முதல்வரோடு ஒருமுறை பேசுகிறேன் என்று அறிவித்தார்.

அதன்படி 2012-ம் ஆண்டு நவ.29-ம் தேதி ஜெயலலிதா பெங்களூரு சென்று அப்போதைய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துறை அமைச்சர்களுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா, ‘‘தமிழகத்தின் உண்மை நிலையை கர்நாடக அரசில் உள்ளவர்கள் எப்போதுமே புரிந்துகொள்வதில்லை.

உச்ச நீதிமன்றம் ஒரு நல்லது நடக்கும் என்ற நினைப்பில் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்னதால், நான் இங்கு வந்தேன். பேசியதில் எந்த பயனும் இல்லை என்ற நிலையில் நான் சென்னைக்கு திரும்பிச் செல்கிறேன்’’ என்று கூறினார்.

தற்போது, `தமிழக முதல்வர், காவிரிப் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதல்வரை சந்திக்கப் போகிறேன்’ என்று சொன்ன பிறகு, ‘‘யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் குறித்து பெங்களூரு வரும் தமிழக முதல்வரிட்ம் பேசுவேன்’’ என்று கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

மேகேதாட்டு விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் கருத்துகளைக் கேட்டும், டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கருத்துகளைக் கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். காவிரியில் நமக்குரிய பங்கு நீரை முதல்வர் விஜய் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.</p></div>
“அப்படி ஒரு நிலம் இருப்பதே எனக்கு இப்போதுதான் தெரியும்” - பழநி நில முறைகேடு குறித்து அமைச்சர் ரமேஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in