

தாளையூத்து ஊராட்சி செயலரை நிற்கவைத்து ஆய்வு செய்வதை தவெக நிர்வாகியுடன் வந்த நபர் எடுத்த ‘செல்ஃபி’ படம் | (உள் படம்) தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன்
பழநி: பழநி அருகேயுள்ள தாளையூத்து ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்காக ஆய்வு செய்த தவெக நிர்வாகி மணிகண்டன், ஊராட்சி செயலரை நிற்கவைத்து அதை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அடுத்துள்ள தாளையூத்து கிராமத்தில் குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஊராட்சி சார்பில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தவெக தொப்பம்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் தனது ஆதரவாளர்களுடன், தாளையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு, நாற்காலியில் அமர்ந்தபடி, ஊராட்சி செயலர் தண்டபாணியை நிற்க வைத்து குடிநீர் பிரச்சினை குறித்து கேட்டறிந்தும், அலுவலகத்தில் இருந்த கோப்புகளையும் மக்கள் பிரதிநிதி போல் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் சென்ற ஆதரவாளர் ஒருவர் இதனை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தி ஏற்படுத்தியது.
அரசு அலுவலகங்களில் தவெக நிர்வாகிகள் ஆய்வு நடத்தக் கூடாது என ஏற்கெனவே முதல்வர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவை மீறி தவெக நிர்வாகி ஆய்வு மேற்கொண்டுதுடன், அதனை ‘செல்ஃபி’ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.