பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடக்கம்

பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடக்கம்
Updated on
1 min read

திண்டுக்கல்: பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு பத்திரவு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், திண்டுக்கல் சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு பணிகளை துவக்கியுள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள தண்டயுதபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், ரூ.2 கோடிக்கு மோசடிப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் வெளிவந்ததையடுத்து பத்திரவுப் பதிவு செய்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட பதிவாளர் சசிகலாவும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பழநி அடிவாரம் போலீஸார், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், போலி டிரஸ்ட் பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நில மோசடியில் இன்னும் பல முக்கியப் பிரமுகர்களுக்கும், உயர்மட்ட அரசியல் நிர்பந்தங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதால், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து பழநி அடிவாரம் போலீஸார் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை  திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய் தங்கத்திடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைத்தனர். இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை துவக்கினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸார் எண்ணிக்கை, இந்த வழக்கு விசாரணையை விரைந்து நடத்த போதுமானதாக இல்லை என்பதால், மதுரை, தேனி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிபிசிஐடி பிரிவில் பணிபுரியும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட போலீஸார் திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

பிற மாவட்டங்களில் இருந்து இவர்கள் உடனடியாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி அஜய்தங்கம் முன்னிலையில் ஆஜராகினர். விசாரணை குழுவினர் 

பழநி கோயில் நிலமோசடி விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் பணியை முதற்கட்டமாக திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் துவக்கியுள்ளனர். இதையடுத்து பழநி சென்று தனித்தனிக்குழுக்களாக பிரிந்து சிபிசிஐடி போலீஸார் தங்கள் விசாரணையை மேற்கொள்கின்றனர்.

பழநி கோயில் நில மோசடி விவகாரம்: சிபிசிஐடி டிஎஸ்பி தலைமையில் விசாரணை தொடக்கம்
‘விடாப்பிடி’ சோனம் வாங்சுக்... மவுனம் கலைக்குமா மத்திய அரசு? - உண்ணாவிரத போராட்டமும் பின்புலமும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in