

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டி பாழாக்கப்படும் அரசு பொதுச் சுவர், பூங்கா சுவர்களை பாதுகாக்க காண்போரை கவரும் ஓவியங்களை வரைந்து மீட்கும் நடவடிக்கையை மாநகராட்சி தொடங்கி உள்ளது.
மதுரை மாநகர் பகுதியி தியில் சமீப காலமாக போஸ்டர் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. வரைமுறையில்லாமல் அரசு பொதுச் சுவர். பூங்கா சுவர்களில் போஸ்டர்களை ஒட்டி பொது இடங்களை பாழாக்கி வருகின்றனர்.
அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர், பல்வேறு சாதி சங்கத்தினர் மற்றும் பொது விழா நிகழ்ச்சிகள் தொடர்பான போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். போஸ்டர்கள் ஒட்ட மாநகராட்சி பல்வேறு விதிமுறைகள் அடங்கிய நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அதை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து. மாநகராட்சி எச்சரித்து வருகிறது. ஆனாலும், போஸ்டர் கலாச்சாரத்தை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சித்ரா உத்தரவின்பேரில், அரசு பொதுச் சுவர்கள், பூங்கா சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை ஊழியர்களை கொண்டு கிழித்து அந்த சுவர்களில் கண்கவர் ஓவியங்கள், கருத்துள்ள வாசங்களை எழுதிப் போடும் விழிப்புணர்வு நடவடிக்கையை மாநகராட்சி ஊழியர்கள் தொடங்கி உள்ளனர். வைகை வடகரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிய 'தமிழ் வைகை பூங்கா' சுவர்களில் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சியினர் வரை போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர். அவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி
திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்து திருக்குறளை எழுதி உள்ளனர். மேலும், அப்பகுதி சுவர் முழுவதும் வர்ணம் பூசி அழகுபடுத்தி உள்ளதால் அவ்வழியே கடந்து செல்லும் மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மதுரை நகரை அழகாக்கும் மாநகராட்சி ஆணையர் சித்ராவின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்த சுவர்களில் மீண்டும் போஸ்டர் ஒட்டி பாழாக்கி விடாமல் தடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.