

சென்னை: “அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியான அரசியல் நிலைபாட்டையே மேற்கொண்டுள்ளது. எனவே, தவெக-வை ஆதரிப்பது என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு மிகச்சரியானது. இதில் திமுகவினர் கோபம் கொள்வதில் எந்த அடிப்படையும் இல்லை” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தவெக-வுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் எழும் விமர்சனங்கள் குறித்து நீண்ட விளக்க அறிக்கை ஒன்றை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த விளக்க அறிக்கையில் அவர், “தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு என்ற நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுகவை சார்ந்தவர்களும், திமுக ஆதரவு அறிவுஜீவிகளும் கடுமையான விமர்சனங்களையும், தாக்குதல்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது தொடுத்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும் ஆளுநரின் நிலையும் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சிக்கோ, அணிக்கோ தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றது.
அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் தேவை, அந்த எண்ணிக்கைக்குரிய ஆதரவு கடிதங்களை அளித்தால்தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்று கூறிவிட்டார்.
இதற்கு, ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம், “தவெக 108, காங்கிரஸ் 5 என 113 இடங்கள் என்று குறிப்பிட்டு கடிதம் அளித்தனர். 113 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே என்று உறுதியாக அவர்களே தெரிவித்த பிறகு எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் அவர்கள் உரிமை கோரவில்லை” என்பது. ஆனால், பெரும்பான்மையை சட்டப்பேரவையில்தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை நாம் அறிவோம்.
இத்தகைய சூழ்நிலையில் சிபிஐ(எம்)-க்கு முன்னால் மூன்று வாய்ப்புகள் இருந்தன.
1. தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது.
2. திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது.
3. எவரும் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்கவில்லை என்றால் குடியரசு தலைவர் ஆட்சி அமையும். இல்லையென்றால் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்வது. மேற்குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர வேறு வாய்ப்புகள் எதுவுமில்லை. மேற்கண்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு விவாதித்தது.
குடியரசுத் தலைவர் ஆட்சியை ஏன் அனுமதிக்கக் கூடாது? உடனடியாக மற்றொரு சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. தேர்தலை அனுமதிப்பதா இல்லையா என்பதும் ஒன்றிய பாஜக அரசின் கையில்தான். ஆளுநர் மூலமாக தாங்களே நேரடியாக ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு வரும்போது நிச்சயமாக அதை அவர்கள் தவற விடமாட்டார்கள்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய நோக்கமும் பாஜக - அதிமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். குடியரசுத் தலைவர் ஆட்சி அமைய வழிவகுப்பது மேற்கண்ட அரசியல் நிலைபாட்டிற்கு எதிரானதாகும். பிறகு, தேர்தல் நடந்தாலும் அது ஒன்றிய பாஜக ஆட்சியின் கட்டுப்பாட்டில்தான் நடக்கும் சூழல் இருக்கும். எனவே, எக்காரணங்கொண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி என்பதை அனுமதிக்கக் கூடாது என்று முடிவெடுத்தோம்.
மக்கள் அளித்த தீர்ப்பும் இடதுசாரிகளின் முடிவும்: இந்தத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சி என்ற நிலையை தவெக பெற்றுள்ளது. சட்டப்படியும் முதல் வாய்ப்பு இந்தக் கட்சிக்கே உள்ளது. ஏறத்தாழ 1.72 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது ‘ஆட்சி மாற்றம்’ - அதாவது திமுக - அதிமுக அல்லாத ஒரு ஆட்சி வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே, தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என்று இரண்டு இடதுசாரி கட்சிகளும் தீர்மானித்தன.
யார் ஆட்சி அமைத்தாலும் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதுதான் நிலைமை. எனவே, இந்த மிக முக்கிய பொறுப்பைச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறையுடன் கட்சி இதை அணுகியது.
“அதிமுக - திமுக கூட்டு” யோசனை நிராகரிப்பு: அதிமுக ஆட்சி அமைப்பது - திமுக ஆதரிப்பது; அதற்கு இடதுசாரிக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்ற கருத்து எழுந்தது அப்பட்டமான சந்தர்ப்பவாதமாகும். இந்தத் தேர்தலின் மையமான அம்சமே பாஜக - அதிமுகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். மக்களும் தோற்கடித்திருக்கிறார்கள். அதிலும் பாஜக ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குக்கும் குறைவாகப் பெற்று வாக்கு சதவிகிதமும் பெருமளவு குறைந்து படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியடைந்துள்ளது. தோல்வியடைந்த ஒரு கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதமில்லாமல் வேறு என்ன? எனவே, அதிமுக - திமுக அணியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி நிராகரித்தது.
திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடர வேண்டும் என்ற முறையில் அந்த யோசனை முன்வைக்கப் பட்டது. இவர்கள்தான், அதிமுகவை திராவிட கட்சி என்ற அளவுகோலில் வைக்க முடியாது என்று பல நேரங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதை நினைவூட்டுகிறோம். மேற்கண்ட கருத்தின் நோக்கமென்ன? திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு யாரும் தமிழ்நாட்டில் ஆட்சி நடத்த விடக்கூடாது என்பதைத் தவிர இதில் தமிழ்நாட்டின் நலன் வேறு என்ன இருக்கிறது? இடதுசாரிக் கட்சிகள் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டாலும் திமுக - அதிமுக இதே நிலைபாட்டை மேற்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததன் மூலம்,
1. குடியரசு தலைவர் ஆட்சி அமைவதைத் தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.
2. திமுக ஆதரவுடன் அதிமுக கூட்டணி ஆட்சி என்ற தவறு நிகழாமல் தடுத்திருக்கிறோம்.
இளைஞர்களின் பேராவேசமும் சமூக வலைதள விமர்சனங்களும்: இன்றைய இளைய தலைமுறையினர் தங்களின் வாழ்க்கை அனுபவத்திலிருந்து “புதிய மாற்று சக்தி” ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பி வாக்களித்துள்ளனர். இங்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் இடதுசாரி - வலதுசாரி இரண்டு தரப்புக்கும் வெற்றி கிடைத்து ஆட்சியில் அமர்ந்துள்ளனர். நேபாளம், இலங்கை போன்ற அண்டை நாடுகளிலேயே இளைஞர்களின் பேராவேசத்தைக் கண்டோம். எனவே, இங்கு மட்டும் மாற்றமே கூடாது என்பது சரியா?
சமூக வலைதளத்தை சரியாகப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி தவெகவினர் வெற்றி பெற்று விட்டனர், இது ரீல்ஸ் ஆட்சிதானே தவிர ரியல் ஆட்சி அல்ல என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. ஆம், திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியைச் சரியாகப் பயன்படுத்தினர்.
சமூக வலைதளம் மூலம் மக்களின் முன் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் என்ன?
ஒன்றிய பாஜக அரசும், மாநில திமுக ஆட்சி யும் கடைபிடித்த நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் உணர்ந்தனர்.
லஞ்சம், ஊழல், சொத்துக் குவிப்பு, கனிம வளக் கொள்ளை, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள்; திமுக கொடுத்த சில தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும், பல வாக்குறுதிகள் காலம் கடந்து நிறைவேற்றப்பட்டதும் உள்ளிட்ட பிரச்சனை களைத்தான் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் முன்வைத்தனர்.
நலத்திட்டங்கள் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்தவில்லை என்பதை திமுகவினர் உணர வேண்டும்.
தவெகவின் உறுதிமொழியும் கம்யூனிஸ்ட்டுகளின் அனுபவமும் : ஆதரவு கேட்டு தவெக அளித்த கடிதத்தில் “மதச்சார்பின்மைக் கொள்கையில் எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். அனைவ ருக்குமான ஆட்சியாக எங்கள் ஆட்சி இருக்கும். நேர்மையான ஆட்சியைத் தருவோம்” என்று கூறியிருந்தனர். நேரில் சந்தித்தபோதும் இதை உறுதிப்படுத்தினர்.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. வெளியிலிருந்து ஆதரவு, கூட்டணி ஆட்சி போன்ற அனுபவங்களெல்லாம் வேறு எந்தக் கட்சியையும் விட செழுமைமிக்க அனுபவம் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு. புதிய அரசியல் சூழ்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த சிறப்பான முடிவு என்று தான் பெரும்பாலானோர் பாராட்டுகின்றனர்.
விமர்சிப்பவர்கள் முன்வைக்கும் கருத்து:
திமுக அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தவெக-வை ஆதரிக்கலாமா? விஜய் அவர்களுக்கு ஆட்சி நடத்தத் தெரியுமா? அரசியல் என்றால் என்ன வென்றே தெரியாதவர்கள், முற்றிலும் புதியவர்கள் என்பது.
ஏற்கெனவே, திமுக ஆதரவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்பதை ஏற்க முடியாது என்பதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது. அடுத்து இருக்கும் ஒரே வாய்ப்பு தவெக ஆட்சி அமைப்பது தான். இல்லையென்றால் குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சிதான் அமைந்திருக்கும். இதை எவரும் ஏற்க முடியாது. எனவே, தவெக-வை ஆதரிப்பது என்ற இடதுசாரிக் கட்சிகளின் முடிவு மிகச்சரியானது. இதில் திமுகவினர் கோபம் கொள்வதில் எந்த அடிப்படையும் இல்லை.
முன் அனுபவம் குறித்த விமர்சனங்களுக்கான பதில்: இரண்டாவது, விஜய் ஒரு நடிகர் என்ற அளவுகோலை வைத்துத்தான் அவருக்கு அரசியல், ஆட்சி என்றால் தெரியுமா என்று கேட்பது. என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆட்சி அமைத்தபோதும் இதுபோன்ற விமர்சனங்கள்தான் முன்வைக்கப்பட்டன.
மக்களிடம் இந்த விமர்சனம் எடுபடவில்லை என்பதுதான் அனுபவம். அவர்கள் புதிது, முன் அனுபவம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் மக்கள் தங்களை நம்பித் தேர்ந்தெடுத்திருக்கும் நிலையில், அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை மற்றவர்களை விட அவர்களுக்குக் கூடுதலாக இருக்கும். எனவே, மக்கள் நம்பிக்கையைத் தக்கவைக்க நல்ல முறையில் ஆட்சியை நடத்த வேண்டும் என்ற அக்கறையுடன் கற்றுக் கொள்வார்கள் என்றே கருதுகிறோம்.
மூன்றாவதாக, தவெக 35 சதவிகித வாக்குகளைத்தானே பெற்றிருக்கிறது, 65 சதவிகித மக்கள் எதிராகத்தானே வாக்களித்திருக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இல்லை. மற்ற கட்சிகளை விட அதிக இடங்களைப் பெறுகிற கட்சி ஆட்சி அமைக்கும் என்பதுதான் நிலை. அகில இந்திய அளவிலும், அனைத்து மாநிலங்களிலும் இதுதான் கடை பிடிக்கப்படுகிறது.
எனவேதான் தேர்தல் சீர்திருத்தம் என்பதை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற கட்சிகளால் இந்த கோரிக்கை முனைப்பாக முன்வைக்கப்படாததால் இது விவாதப் பொருளாக ஆகவில்லை. வரும் காலத்தில் வலுவாக இதை வலியுறுத்த வேண்டும்.
திமுக அல்லது அதிமுக-வை தேர்ந்தெடுப்பது மட்டும்தான் மக்களுக்கு இருந்த வாய்ப்பு என்று கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ்நாட்டில் ‘இரு துருவ ஆட்சி’ என்று நிலவிய நிலைக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது முக்கிய திருப்புமுனையாகும்.
புதிய ஆட்சியின் முன்னுள்ள சவால்களும் சிபிஐ(எம்)-ன் பார்வையும்:
புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் அரசியல், பொருளாதாரக் கொள்கை என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய - மாநில அரசுகள் கடைபிடித்த தாராளமய பொருளாதார கொள்கை காரணமாக, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கற்பனைக்கெட்டாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஒருபக்கம் சொத்துக்களின் குவிப்பு; மற்றொரு பக்கம் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லாடும் பெரும்பகுதி மக்கள்.
கௌரவமான, நிரந்தரமான வேலை, உறுதிப் படுத்தப்பட்ட ஊதியம் என்பதெல்லாம் பொய்யாய், கனவாய் போய்விடுமோ என்ற அளவுக்கு வேலை யில் இருப்பவர்கள், வேலை தேடுவோர் நிலைமை பதற்றம் நிறைந்ததாக மாறியுள்ளது. இதில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியம். எதற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நேர்மையான, ஊழலற்ற ஆட்சி என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் எவையெல்லாம் தவறு, குறை என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றினார்களோ அவற்றையெல்லாம் இல்லாமல் சரி செய்ய வேண்டிய கடமை புதிய ஆட்சிக்கு உள்ளது. மக்களின் தலையில் சுமையை ஏற்றாமல் அரசுக்கான நிதி வருவாயை எப்படிப் பெருக்குவது என்பது முக்கியமான சவால். தொழிலாளர்கள், விவசாயிகள், ஏழைகள் தொடர்பாக இவர்கள் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப் போகிறார்கள்?
மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கும் முன் வர வேண்டும். இவற்றுக்கெல்லாம் ஒரு கால அவகாசம் தேவை என்பது சரியே.
ஏற்கெனவே, முதல்வர் விஜய் கொடுத்துள்ள உறுதிமொழிகளுடன், மக்கள் நலன் சார்ந்த சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றினால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கும், ஆதரவளிக்கும். மக்களுக்குப் பாதகமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்த்துப் போராடுவோம் என்பது தான் இந்த ஆட்சி குறித்த கட்சியின் நிலைப்பாடு என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.
கட்சியின் சார்பில் சில சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண முடியும் என்ற எந்த மாயையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடையாது. அதே நேரத்தில், மக்களின் உரிமைகளைக் காக்க, கோரிக்கைகளை எடுத்துரைத்து, வலுவாகக் குரல் எழுப்ப முடியும். ஆட்சியாளர்களின் தவறுகளை அம்பலப்படுத்த முடியும்.
எனவே, அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சரியான அரசியல் நிலைபாட்டையே மேற்கொண்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.