மேகேதாட்டு விவகாரத்தில் தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு ஏன்? - பழனிசாமி விவரிப்பு

மேகேதாட்டு விவகாரத்தில் தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு ஏன்? - பழனிசாமி விவரிப்பு
Updated on
2 min read

சென்னை: “நீண்ட சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட தமிழக மக்களின் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், 20 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது,” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் தனித்தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். அதில் அதிமுக சார்பில் எனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படுவதை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்டது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது 5.12.2014 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு எழுதிய கடிதத்தை தமிழகம் மற்றும் புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 55 பேர் 28.03.2015 அன்று பிரதமரை சந்தித்து கொடுத்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை திரட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும், கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், முதல்வராக இருந்த ஜெயலலிதா 25.04.2015 அன்று பிரதமரை நேரில் சந்தித்து, மேகேதாட்டு அணையை கர்நாடக அரசு கட்டக்கூடாது என அம்மாநில அரசுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளும் கடிதத்தை அளித்தார். அதோடு, 07.08.2015, 14.06.2016 ஆகிய நாட்களில் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் ஒப்புதலைப் பெறாமலும் காவிரியின் குறுக்கே மேகதாது உட்பட எந்த ஒரு கட்டுமான திட்டத்தையும் கர்நாடக அரசு உத்தேசிக்குமானால் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் 18.08.2016 அன்று விதி எண் 110 விதியின் கீழ் உறுதிபட தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக 16.02.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், பல மாநிலங்கள் வழியாகப் பாயும் நிதிகள் தேசிய சொத்து. எந்த ஒரு மாநிலமும் தனி உரிமை கோர முடியாது என்று 1991, நவம்பரில் உச்ச நீதமன்றம் தெரிவித்த கருத்து மீண்டும் இந்த தீர்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. 1892, 1924ம் ஆண்டுகளின் ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என்ற கர்நாடக அரசின் வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

தமிழகத்தின் காவிரி பாசன பரப்பான 24.708 லட்சம் ஏக்கர் என்பதை 21 லட்சம் ஏக்கராக குறைக்க வேண்டும் என கர்நாடக அரசு நடுவர் மன்றத்தின் முன் வாதிட்டது. இதை காவிரி நடுவர் மன்றம் ஏற்கவில்லை. தமிழகத்தின் காவிரி பாசன பரப்பு 24.708 லட்சம் ஏக்கர் என காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாதகம் ஏதும் இல்லாமல், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைப்படி மாதாதந்திர அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு நீர் வழங்க வேண்டும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல், மேல் படுகை மாநிலங்கள் எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணையைக் கட்டக்கூடாது என நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பலமுறை பிரதமருக்கு நேரிலும் கடிதம் மூலமாகவும் வலியுறுத்தி உள்ளேன். கர்நாடக அரசு, மேகேதாட்டு அணையை கட்டினால் அது தமிழகத்தின் காவிரி படுகையை பாலைவனமாக்கிவிடும்; தமிழகத்தின் உரிமையையும் அது பறித்துவிடும்.

இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

நீண்ட சட்டப்போராட்டத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்பட்ட தமிழக மக்களின் உரிமை, டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம், 20 மாவட்டங்களுக்கான குடிநீர் ஆதாரம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை வழங்கிய இறுதித் தீர்ப்பை மதிக்காமல் மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு தன்னிச்சையாக நிதி ஒதுக்கீடு செய்ததும், திருத்திய தொழில்நுட்ப திட்ட அறிக்கையை மீண்டும் இம்மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது. எனவே, முதல்வர் கொண்டு வந்த அரசின் தனித்தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது” என தெரிவித்தார்.

மேகேதாட்டு விவகாரத்தில் தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு ஏன்? - பழனிசாமி விவரிப்பு
“நீர் மேலாண்மை பற்றி யோசியுங்கள்” - மேகேதாட்டு தீர்மானத்தில் பிரேமலதா பேச்சு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in