விவசாய நிலங்களை கையகப்படுத்துவது குறித்த செங்கோட்டையன் கருத்தால் விவசாயிகள் அதிருப்தி: பெ.சண்முகம் விமர்சனம்

பெ.சண்முகம் | கோப்புப்படம்
பெ.சண்முகம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம், சொத்துவரிக் குறைப்பு, வேலையின்மை பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆக.21 முதல் 31-ம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர், பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், பொதுமக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் 40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வந்தாலும், எந்த விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் உருவாக்கப்படவில்லை. இதுபோல் சென்னையில் பல குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இவையெல்லாம் பட்டா இல்லாத பகுதிகள் என்கிற பெயரில் புறக்கணிக்கப்படுகின்றன.

பட்டா வழங்கவேண்டிய அரசாங்கம், பட்டா வழங்காத காரணத்தாலேயே எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் பெறுவதற்கு இம்மக்கள் தகுதியற்றவர்களா? 40 ஆண்டுகள் மக்கள் வாழும் பகுதிகளை குடியிருப்புகளாக அங்கீகரித்து குடிமனை பட்டா வழங்குவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

மேட்டூர் அணையில் 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்துவிடப்படும் என்பது ஏற்புடையதல்ல. 150 நாட்கள் வரை இருந்தால்தான் சம்பா சாகுபடி செய்ய முடியும். எனவே, தமிழக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரைப் பெற்று, சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசு திட்டங்களுக்கு விவசாய நிலங்களைத்தான் கையகப்படுத்த வேண்டியிருக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றைத் தேடி கண்டறிந்து பயன்படுத்துவது அரசின் பொறுப்பு. அதைவிடுத்து, முப்போகம் விளையும் நிலங்களை வேறு பணிகளுக்கு மாற்றுவது உணவு, தானிய உற்பத்தியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

பெ.சண்முகம் | கோப்புப்படம்
ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in