

சென்னை: ஓஎன்ஜிசி நிறுவன சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பி.ஆர்.பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுகளை அமைப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி.ஆர்.பாண்டியன் தலைமையில் திருவாரூர் மாவட்டம், கரியமங்கலத்தில் 2015-ம் ஆண்டு போராட்டம் நடந்தது.
அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர்.பாண்டியன், முன்னாள் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் உள்ளிட்ட 24 பேருக்கு எதிராக விக்கிரபாண்டியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் அமர்வு நீதிமன்றம், பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு மட்டும் தலா 13 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து மற்றவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. அதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக நடந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, விவசாய சங்கத் தலைவர் என்ற முறையில் மற்ற விவசாயிகளின் நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்துக்காக பி.ஆர்.பாண்டியனுக்கும், செல்வராஜூக்கும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இருவருக்கும் இடைக்கால நிவாரணமாக ஜாமீன் வழங்க வேண்டுமென கோரினார். அதையடுத்து இது தொடர்பாக காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் டிச.19-க்கு தள்ளி வைத்துள்ளார்.