மு.வீரபாண்டியனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை இணைக்க முயற்சி?

மு.வீரபாண்டியனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை இணைக்க முயற்சி?
Updated on
1 min read

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனை, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்தித்துப் பேசினார். கம்யூனிஸ்ட் கட்சிகளை தவெக கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் காலியாகும் ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு தவெக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் தனது வலைதளப் பக்கத்தில், ‘தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடங்கிய தமிழக சமூகநீதி முற்போக்கு கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாக, பெரும் பொறுப்பாக கருதுகிறேன்’ என்று பதிவிட்டார்.

ஆனால், 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் ‘நாங்கள் அந்த கூட்டணியில் இடம்பெறவில்லை’ என்று கூறி கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, அக்கட்சிகளின் மாநிலச் செயலாளர்களை பிரவீன் சக்கரவர்த்தி கடந்த 5-ம் தேதி சந்தித்துப் பேசினார். இதன் தொடர்ச்சியாக, சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகமான ‘பாலன்’ இல்லத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று சந்தித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக கூறினார். தொடர்ந்து, வீரபாண்டியன் கூறியதாவது: கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கூட்டணியில் சேராது. அதுபோன்று நாங்கள் முடிவெடுக்க மாட்டோம். அந்த சூழல் வரும்போதுகூட, கமிட்டி மூலமாகத்தான் முடிவு எடுப்போம். இப்போதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருந்து கொண்டுதான் தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். எதிர்வரும் தேர்தல்களில் நிலைப்பாடு குறித்து எதிர்காலத்தில் சிந்திப்போம். இப்போது தவெக நல்லாட்சி தர வேண்டும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம்.

இண்டியா கூட்டணியில் இருக்கிறோம்: தவெக இப்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம், சட்டம் - ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக காவல் துறையை முடுக்கிவிட வேண்டும். இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது திமுகவின் கருத்து. நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். தேசிய அளவில் எங்கள் கட்சித் தலைவர்கள் அந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளை தவெக கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.வீரபாண்டியனுடன் ப.சிதம்பரம் சந்திப்பு: தவெக கூட்டணியில் கம்யூனிஸ்ட்களை இணைக்க முயற்சி?
நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in