

சென்னை: மத்திய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 2-வது முறையாக அவரை கொன்றுள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கு என்பது சோனியா, ராகுல் மற்றும் சிலர் மீது ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த வழக்கில் காவல் துறையும், புலனாய்வுத் துறையும் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. எஃப்ஐஆரே இல்லாத ஒரு வழக்கில் அமலாக்கத் துறை ஒரு குற்றத்தை பதிவு செய்தது சட்ட விரோதமாகும்.
முதல் குற்றத்தை பதிவு செய்யாமல், 2-வது குற்றத்தை பதிவு செய்யவே முடியாது. அமலாக்கத் துறை இதில் சட்ட விரோதமான நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று கூறி வழக்கையே நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் நடைபெறவில்லை. இந்த தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்தால் அவர்களுக்கு புத்தி இல்லை என்று பொருள்.
100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து, காந்தியின் பெயரை நீக்கி, 2-வது முறையாக அவரை கொன்றுள்ளனர். காங்கிரஸ் கொண்டு வந்த 100 நாள் வேலைதிட்டத்தில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். இந்தியா முழுவதும் ஒரே நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கான ஊதியத்தை மத்திய அரசு முழுமையாக வழங்கியது. திட்டத்தில் குறை இருந்தால் நிவர்த்தி செய்யலாம் ஆனால் திட்டத்தையே ரத்து செய்து, வாயில் நுழையாத பெயரை வைப்பதைதான் கடுமையாக எதிர்க்கிறோம். புதியதிட்டத்தை காங்கிரஸ் உறுதியாக எதிர்க்கும். கிராமம் கிராமமாகஇந்த மோசடியை அம்பலப்படுத்துவோம். இந்த சட்டம் ரத்தாகும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.