

சென்னை: அரைகுறையாக திட்டங்களை தொடங்கி வைத்து வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு விளம்பர மோகத்தாலே வீழும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நெல்லையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளதாகப் பெருமை பேசும் முதல்வர், கடந்த அக்டோபரில் தென்காசி கூடலூர் அரசுப் பள்ளிக்குப் புதிய கட்டிடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. மரத்தடியில் மாணவர்கள் பயின்றனர். தேர்தல் நேரத்தில் கணக்கு காட்டவும் கடைசிநேர கமிஷனுக்கும் கஜானாவை வழித்தெடுக்க மட்டுமே திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சி.
'பொருநையைப் போற்றுகிறேன்' என்னும் போர்வையில் போட்டோ ஷூட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி, அரைகுறையாக நான்கு திட்டங்களைத் தொடங்கிவைத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் திமுக அரசு தமது விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்தூரமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.