

சென்னை: காஸ் சிலிண்டர் விநியோகத்தில் ஓடிபி எண் இன்று முதல் கட்டாயமாகிறது. ஓடிபி எண் இருந்தால் மட்டுமே சிலிண்டர்களை வழங்க, விநியோகிப்பவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான்-அமெரிக்கா போர் காரணமாக, கடந்த மார்ச் மாதத் தொடக்கத்தில், இந்தியாவுக்கு எரிபொருள் ஏற்றி வரும் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.
இதனால் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியது. மார்ச் 9-ம் தேதி முதல் வணிகப் பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டது.
அதேநேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டர் தடையின்றி விநியோகிக்கப்படுகிறது. மேலும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் முன்பதிவு இடைவெளியை பொருத்தவரை, நகரங்களில் 25 நாட்களாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதை பின்பற்றி, வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங் செய்தாலும், ஒரு சில இடங்களில் காஸ் சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி முறை இன்றுமுதல் கட்டாயமாகிறது. அதாவது ஓடிபி அடிப்படையிலான சிலிண்டர் டெலிவரி 100 சதவீதம் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது நாட்டில் 94 சதவீதம் அளவில் இருக்கும் இந்த நடைமுறை முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. இந்த புதிய மாற்றத்தின் மூலம், சிலிண்டர் திருட்டு மற்றும் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுவது முழுமையாகத் தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “காஸ் சிலிண்டரை ஓடிபி எண் முறையில் விநியோகிக்கும் நடைமுறை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது.
இப்போது இது கட்டாயமாக்கப்படுகிறது. எங்களின் சிலிண்டர்களை விநியோகிப்பவர்களிடம், வாடிக்கையாளர்கள் தவிர பிறருக்கு சிலிண்டர்கள் செல்வதைத் தடுக்க, கட்டாயம் ஓடிபி எண் வாங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளோம். இதன்மூலம், சரியான வாடிக்கையாளருக்கு காஸ் சிலிண்டர் செல்வது உறுதி செய்யப்படும்'' என்றார்.