

சென்னை: தமிழக எம்எல்ஏக்களுக்கு 2 நாள் புத்தாக்கப் பயிற்சி சென்னையில் வழங்கப்பட உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், தவெக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. தற்போதைய 229 எம்எல்ஏக்களில் சுமார் 145 பேர் (60%) புதுமுகங்களாக இருக்கின்றனர். இதில் தவெகவில் மட்டும் 101 பேர் முதல்முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளனர். இதற்கிடையே சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் வரும் ஜூன் 18-ம் தேதி தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து 2 நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் செய்தியாளர்களிடம் கூறியது: ஒவ்வொரு முறையும் தேர்தல் முடிந்து சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த முறையும் 17-வது சட்டப்பேரவைக்கு தேர்வான அனைத்து எம்எல்ஏக்களுக்கும் இருநாள் பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஜூன் 16, 17-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை நடத்தப்பட உள்ளது. முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதில் பேரவை விதிகளுக்குட்பட்டு உறுப்பினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களும் அவர்களுக்கு பயிற்சியில் விவரிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.