சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 48 பெரிய கோயில்களின் வரவு - செலவு தொடர்பான தணிக்கை முழு விவரங்களை 2 வாரங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
இது தொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2023-ல் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: அறநிலையத் துறை சட்டப்படி, அத்துறையின் வரவு-செலவு தொடர்பாக ஒவ்வோர் ஆண்டும் தகுதியான தணிக்கையாளர்களைக் கொண்டு கண்டிப்பாக தணிக்கை செய்ய வேண்டும்.
ஆனால், அதிக அளவில் வருமானம் வரக்கூடிய பெரிய கோயில்களின் வருவாயை முறையாக தணிக்கை செய்வதில்லை. இதனால் கோயில்களுக்கான உபரிநிதி எவ்வளவு இருப்பு உள்ளது, எவ்வளவு நிதி செலவு செய்யப்படுகிறது, எவ்வளவு வருவாய் கிடைத்தது என எந்த விவரமும் தெரிவதில்லை.
இதன் காரணமாக கோயில் நிதி, அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு வாகனம் வாங்குவதற்காகவும், துறை சார்ந்த கூட்டங்களுக்கு டீ, காபி, தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் வாங்குவதற்காகவும் செலவிடப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து கோயில்களின் வரவு-செலவு குறித்த ஆண்டு தணிக்கை விவரங்களை அறநிலையத் துறையின் இணையதளத்தில் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பிடிஎப் வடிவில் பதிவேற்றம் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அருண் நடராஜன், “ரூ.1 கோடிக்கும் மேல் வருமானம் உள்ள 48 கோயில்களின் வரவு செலவு தொடர்பாக தணிக்கை செய்யப்பட்டு, அதுகுறித்த சுருக்கமான விவரங்கள் இணையத்தி்ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வி்ட்டது, மேலும், பல கோயில்களின் தணி்க்கை விவரங்கள் தயாராக உள்ளன” என்றார்.
அதற்கு மனுதாரரான டி.ஆர்.ரமேஷ், “பெரிய கோயில்களின் வரவு-செலவு தொடர்பான முழு விவர அறிக்கை இன்னும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஆண்டுதோறும் கிடைத்த வருமானம், செலவுக்கான முழு விவரங்கள் குறித்த தணிக்கை விவரங்களை தாக்கல் செய்யவில்லை” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “அறநிலையத் துறை சார்பில் சுருக்கமான தணிக்கை விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், தமிழகம் முழுவதும் உள்ள 48 பெரிய கோயில்களின் தணிக்கை தொடர்பான முழு விவரங்களையும் இரு வாரங்களில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை டிச. 18-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.