சென்னை: தி.நகர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வான ஜெ.சத்தியநாராயணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-21 காலகட்டத்தில் சென்னை தி.நகர் அதிமுக எம்எல்ஏவாக பதவி வகித்த சத்யா என்ற ஜெ.சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.44 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அவர் மீதும், அவரது மனைவி ஜெயசித்ராவுக்கு எதிராகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்று சென்னை எம்பி,எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சத்தியநாராயணன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நடந்தது. அப்போது, “தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பாக தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்கவில்லை. குற்றப்பத்திரிகையை ஏற்றுக்கொண்டதற்கான காரணங்களை தெரிவிக்காமல் சிறப்பு நீதிமன்றம் இயந்திரத்தனமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது” என சத்தியநாராயணன் தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்று சிறப்பு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து உத்தரவிட்டார். அதேநேரம், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதற்கான காரணங்கள் குறித்து ஒரு வாரத்தில் விளக்கமளிக்க சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.