“பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல் தொடர்பாக விரைவில் அரசாணை” - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

“பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல் தொடர்பாக விரைவில் அரசாணை” - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
Updated on: 
2 min read

சென்னை: “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும்,” என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கவுதமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்து செல்லும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க திமுக ஆட்சியில் 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்காக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 1,700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசுப் பணம் செலவழிக்கப்பட்டு 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதல்வர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.

புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் 2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 1,527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023-ம் ஆண்டு அனுமதி வழங்கியது.

மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும் எந்தவித தொழில்நுட்பப் புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் வெளியிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது தொடர்பான முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும். அதேபோல பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். மேலும் கைவிடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் 1,700 ஏக்கர் நிலம் ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்டு அரசுப் பணம் 680 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டத்தை கைவிடுவதாக சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், பாதியில் திட்டத்தை எப்படி கைவிட முடியும்? தொழில்நுட்ப ஆய்வுகள் உள்ளிட்ட ஆய்வுகள் நடத்தி விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது எப்படி அந்தப் பகுதி சாத்தியம் இல்லாதது எனக் கூற முடியும்? என அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், “விமான நிலையம் அமையவுள்ள பகுதியில், நீர்நிலைகள், விவசாய நிலங்கள் அமைந்துள்ளன. இதனால், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவது சிக்கலானது. தவறான முடிவுகள் திருத்தப்பட வேண்டும். விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவது அரசின் கொள்கை. பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது தொடர்பான அரசாணை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அரசாணை வெளியிடப்படும். மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், “மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

“பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடல் தொடர்பாக விரைவில் அரசாணை” - ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
“108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை உடனடியாக அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்”- அன்புமணி

X