‘டியூடு’ திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய பாடல்களை நீக்க கோரி இளையராஜா மனு: உத்தரவு தள்ளிவைப்பு

‘டியூடு’ திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய பாடல்களை நீக்க கோரி இளையராஜா மனு: உத்தரவு தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: தீபாவளியையொட்டி வெளியான ‘டியூடு’ திரைப்படத்தில், தனது இசையமைப்பில் வெளியான 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த, 'கருத்த மச்சான்' மற்றும் 'பணக்காரன்' படத்தில் இடம் பெற்றிருந்த '100 வருஷம் இந்த மாப்பிள்ளையும்' ஆகிய பாடல்களை தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த 2 பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘‘30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார்.

பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது’’ என குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்து வாதிட்ட இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், “அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலுக்கான உரிமை இளையராஜாவிடம் உள்ளது.

அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும், உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். ‘டியூடு’ திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ‘‘பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடமிருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்தது.

சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதியை பெற்றுள்ளோம்’’ குறிப்பிட்டார். இளையராஜா தரப்பில், ஏற்கெனவே எக்கோ நிறுவனம் பயன்படுத்த 2 நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘‘படம் திரையரங்கிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்?’’ என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார்.

அதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ‘‘ஏற்கெனவே இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அதுபோல எந்த நபரும் இல்லை என்று நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டது’’ என தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீது உத்தரவு பிறப்பிப்பதற்காக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

‘டியூடு’ திரைப்படத்தில் அனுமதியின்றி பயன்படுத்திய பாடல்களை நீக்க கோரி இளையராஜா மனு: உத்தரவு தள்ளிவைப்பு
மெரினாவில் வியாபாரிகளை நெறிப்படுத்தும் விவகாரம்: அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in