

சென்னை: மெரினா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து விளக்கமளிக்க, சுற்றுச்சூழல் துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் கடைகளை ஒதுக்கக் கோரி, சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தேவி என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அடங்கிய அமர்வு, “மெரினா கடற்கரையில் சாலையோர வியாபாரத்தை நெறிப்படுத்த, மாநகராட்சி ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறதா? சாலையோர வியாபாரிகளின் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து, சுற்றுச்சூழல், வனத்துறை செயலர், மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கை தாக்கல் செய்யப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “உலகத்தில் 2-வது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை மேம்பாட்டில் அக்கறை காட்டவில்லை.
எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அமல்படுத்துவதில்லை. இதை சரியான அணுகுமுறையாக கருத முடியாது. இது தொடர்பாக டிச.10-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று சுற்றுச்சூழல் துறை செயலர், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.