

சென்னை: காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான பாட்டில்களை ரூ. 10-க்கு கூடுதலாக விற்பனை செய்து அந்த பாட்டிலை திருப்பித்தரும் பட்சத்தில் ரூ.10-ஐ திருப்பி வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமலில் உள்ளதாக தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “இந்த திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க இருக்கிறோம். அப்போது காலி மதுபாட்டில்களை திரும்பப்பெற டாஸ்மாக் பணியாளர்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும்.
இதற்காக ரூ. 10 கூடுதலாக வசூலித்தால் அதையும் ரசீதில் குறிப்பிட வேண்டும்.அதைவிடுத்து அந்த ரூ.10-ஐ கூடுதலாக வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றனர்.
அப்போது குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், “இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்றார். அதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை முழுமையாக மாற்றியமைப்பது தொடர்பாக தமிழக அரசு 8 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும்.
இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.