

சென்னை: பெரம்பூர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற சூட்கேஸில் தலையில்லாத இளைஞர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையம் நேற்று காலை வழக்கம்போல் பரபரப்பாக காணப்பட்டது.
அப்போது அங்குள்ள 4-வது நடைமேடையில் நீல நிற சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. நீண்ட நேரமாக சூட்கேஸ் அங்கேயே இருந்ததால், ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று அந்த சூட்கேஸை எடுத்தனர். அது அதிக எடையுடன் காணப்பட்டதால் சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக வெடிபொருட்களைக் கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அப்போது பெட்டியில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து சூட்கேஸின் பூட்டை உடைத்து பார்த்தபோது அதற்குள் தலையில்லாத இளைஞர் ஒருவரது சடலம் இருந்தது.
அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீஸார் அந்த உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அங்கும் இங்கும் சிறிது தூரம் ஓடியது.
ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்டமாக சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சூட்கேஸ் இருந்த இடம் பதிவாகவில்லை.
இதனால் சூட்கேஸை கொண்டு வந்தது யார் என போலீஸாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கொலையானவர் யார், இறந்தவர் சென்னை இளைஞரா அல்லது வேறு மாநிலத்தில் கொலை செய்து உடலை இங்கு வீசிச் சென்றார்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.