

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
மதுரை: செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில் நீதித் துறை நடுவர் மற்றும் சிபிசிஐடி விசாரணை அறிக்கைகளையும், காவல் நிலைய சிசிடிவி பதிவுகளையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தேனியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், லாரியில் தீ விபத்து ஏற்பட்டு ஏலக்காய் மூட்டைகள் சேதமானது தொடர்பான புகாரின் பேரில் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் காவல் நிலைய கழிவறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால், உடற்கூறாய்வில் பாலகிருஷ்ணன் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே, பாலகிருஷ்ணன் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றவும், அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான கிளீட்டஸ், “லாரியில் தீப்பற்றிய தகவலை தெரிவிக்க வாலாந்தூர் காவல் நிலையம் சென்றவரை போலீஸார் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் சட்டவிரோத காவலில் வைத்து துன்புறுத்தியுள்ளனர். மறுநாள் காலையில் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் அளித்துள்ளனர். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என வாதிட்டார்.
பாலகிருஷ்ணன் மனைவி தரப்பில் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் வாதிடும்போது, “காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநரை வாலாந்தூர், செக்கானூரணி, உசிலம்பட்டி நகர், உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையங்களுக்கு அலையவிட்டுள்ளனர். இந்த காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகளைப் பார்வையிட தனி நீதிபதி அனுமதி வழங்கினார். அந்த வீடியோ காட்சிகள் சத்தமின்றி எங்களுக்கு காண்பிக்கப்பட்டன” என்றார்.
அரசு தரப்பில், “ஓட்டுநர் பாலகிருஷ்ணன் காவல்நிலைய கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உடற்கூறாய்வு தொடர்பாக மருத்துவர்களின் இறுதிக் கருத்து இன்னும் வரவில்லை. சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் சிபிசிஐடி எஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். வழக்கு தொடர்பான பேரையூர் நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகள், சிபிசிஐடி விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கை, இறுதி மருத்துவ அறிக்கை ஆகியவற்றை டிச. 7-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.