

சென்னை: ரயில்வேயில் நாடு முழுவதும் 16,499 ரயில்வே கேட்டுகள் (கடவு பாதைகள்) உள்ளன.
இதில் 10,159 கேட்டுகளில் இன்டர்லாக்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிக்னல் இல்லாமல் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேட்டுகள் உள்ளன. இந்த வகை கேட்டுகள் எப்போதும் மூடி இருக்க வேண்டும்.
சாலைகளில் ஏதேனும் வாகனங்கள் வந்தால், ஸ்டேசன் மாஸ்டரிடம் உரிய அனுமதி பெற்று, கேட்டை திறந்து, அதன்பின் மூடியே வைத்து இருக்க வேண்டும்.
இந்த விதிகளால் கேட் கீப்பர்களோடு சாலையை கடப்பவர்கள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் சண்டை போடுவது தாக்குவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இதற்கு தீர்வாக, இனி இந்த கேட்டுகளை எப்போதும் திறந்து வைத்திருக்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
ரயில் கோட்ட மேலாளர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆய்வுக்குப் பின் கேட் கீப்பர்களுக்கு உத்தரவிட கூறியுள்ளது.
இனி ரயில்கள் வரும்போது மட்டுமே ரயில்வே கேட்டுகள் மூடப்படும். ரயில்கள் வராத மற்ற நேரங்களில் திறந்து இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து,ரயில்வே தொழிற்சங்க முன்னாள் தலைவர் மனோகரன் கூறும்போது, “ரயில்வேயில் ‘சி’ பிரிவு கேட்டுகளில் பெரும்பாலான கேட்டுகள், எப்போதும் மூடியே இருக்க வேண்டும் என்ற ரயில்வே விதிகளில் தற்போது மாற்றம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது"என்றார்.