

கோப்புப் படம்
சென்னை: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3,400 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணை விவரம்: சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஒய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக உயர்த்தப்படும். மேலும், பணிநிறைவின் போது அவர்களுக்கு தரப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.1 லட்சத்தில் ரூ.2 லட்சமாகவும் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.
மேலும், குறு அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3,200 ஆகவும், பணிநிறைவின் போது வழங்கப்படும் ஒட்டுமொத்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியமாக ரூ.1,200-ம், குறுஅங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்து விட்டால் அவர்களின் குடும்பத்துக்கு ஓய்வூதியமாக ரூ.1,000-ம் வழங்கப்படும்.
மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.20,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதை செயல்படுத்தும் விதமாக சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஓய்வூதியம், ஒட்டுமொத்த தொகையை உயர்த்தியும், அவர்கள் ள் ஓய்வுக்கு பின் உயிரிழக்க நேரிட்டால் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறுதிச் சடங்குக்கான செலவினத் தொகை வழங்கவும் ஆணையிடப்படுகிறது’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.