

சென்னை: ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் கரும்புகை வெளியேற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் மருந்து நிறுவனத்துக்கு எதிரான புகாரை பரிசீலி்த்து 8 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூர் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள ‘அன்ஜன் டிரக்ஸ்’ என்ற தனியார் மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளதாகவும், அந்த ஆலையி்ல் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் ‘அட்வான்ஸ்டு பயோடெக் ப்ராடக்ட்ஸ்’ என்ற மருத்துவ அறுவை சிகிச்சை உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனம் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.முருகபாரதி, “மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழக அரசின் உயரதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெளியேறும் நச்சுப்புகையால் சுற்றுவட்டார கிராமங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயமும் பாதி்க்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
இதையடுத்து, மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை அரசின் கூடுதல் தலைமைச் செயலர், செங்கை ஆட்சியர் உள்ளிட்டோர் 8 வார காலத்தில் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பரிசீலி்த்து உரிய நடவடிக்கை எடுக்க தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.