

சென்னை: கரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது வனவிலங்குகள் ஆர்வலரான முரளிதரன், “கோயில் யானைகளை ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அழைத்து செல்லப்பட்டு, மற்ற யானைகளுடன் பழகவைத்து, அந்த யானைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள், சிறப்பான உணவு வகைகள் வழங்கப்பட்டு புத்துணர்வு அளிக்கப்பட்டது.
இந்த நடைமுறை கரோனா கால கட்டத்தில் நிறுத்தப்பட்டது. அதன்பின் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
அதையடுத்து நீதிபதிகள், புத்துணர்வு முகாமை மீண்டும் தொடங்காதது ஏன் என கேள்வி எழுப்பி, அதுதொடர்பாக விரிவான அறிக்கை அளிக்க வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் வனப்பகுதிகளில் தாயைப் பிரியும் குட்டி யானைகளை வனப்பகுதியில் விடும்போது அவற்றை வனத்துறை கண்காணிப்பது இல்லை. எனவே தாயைப் பிரியும் குட்டி யானைகளை மீட்டு, முகாமில் பராமரித்து அவற்றை ஒன்றாக சேர்த்து வனப்பகுதிகளில் விட வேண்டும் என்ற மனுதாரரின் ஆலோசனை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் பிப்.6-க்கு தள்ளிவைத்துள்ளனர்.