

போடியில் திமுக சார்பில் நடைபெற்ற பூத்கமிட்டி கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ்
தேனி: போடி தொகுதியில் எதிர்க்கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத்கமிட்டிக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் தங்க பதக்கம் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என்று வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் இணைந்து அறிவித்துள்ளனர்.
போடி நகர் ஒன்றியம், சின்னமனூர் ஒன்றியம், தேனி வடக்கு ஒன்றியம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தனித்தனியே பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
போடி மேலசொக்கநாதபுரத்தில் நகர் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசியது: “121 பூத்துகள் உள்ள இந்த ஒன்றியத்தில் எதிர்கட்சி வேட்பாளரை விட அதிக வாக்குகளை பெற்றுத் தரும் பூத் கமிட்டிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்க இருக்கிறேன். ஆகவே தொண்டர்கள் உற்சாகத்துடனும், முனைப்புடனும் செயலாற்ற வேண்டும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “வேட்பாளர் என்ற முறையில் ஒவ்வொரு பூத்திலும் திமுகவுக்கு அதிக வாக்குகள் வாங்கித் தரும் பூத்கமிட்டிக்கு எனது சார்பில் நானும் ரூ.1 லட்சம் பரிசு வழங்குகிறேன். மேலும் பூத் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி அதிக வாக்குகளை பெற்றுத் தரும் நகர் ஒன்றிய பேரூர் கழக செயலாளர்களுக்கு ஐந்து பவுன் தங்க பதக்கமும் வழங்கப்படும்” என்றார்.
ரொக்கம் மற்றும் தங்க பதக்க பரிசு அறிவிப்பால் போடி சட்டமன்ற திமுக பூத் கமிட்டி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். நிகழ்ச்சியில் போடி மேற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணன், முன்னாள் எம்பி.ரவீந்திரநாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.