வரிசைகட்டிக் கிளம்பும் ஆதரவாளர்கள் - இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார் ஓபிஎஸ்?

வரிசைகட்டிக் கிளம்பும் ஆதரவாளர்கள் - இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார் ஓபிஎஸ்?
Updated on
2 min read

தன்​னோடு இருந்த முக்​கிய நிர்​வாகி​கள் அனை​வ​ரும் ஒரு​வர் பின் ஒரு​வ​ராக மாற்​றுக் கட்​சிகளில் ஐக்​கி​யம் ஆகி​விட்ட நிலை​யில், இன்​ன​மும் ஓபிஎஸ் மவுன குரு​வாகவே இருப்​ப​தால் அவர் பக்​கம் மிஞ்சி இருக்​கும் சொற்ப நிர்​வாகி​களும் உச்​சபட்ச விரக்​தி​யில் உள்​ளனர்.

ஜெயலலிதா மறைவுக்​குப் பிறகு, சசிகலா தரப்பு தந்த நெருக்​கடி​யால் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்த ஓபிஎஸ், சசிகலா​வுக்கு எதி​ராக ‘தர்​ம​யுத்​தம்’ தொடங்​கி​னார். அப்​போது அவருக்கு பக்​கபல​மாக முன்​னாள் அமைச்​சர்​கள் கே.பி.​முனு​சாமி, நத்​தம் ஆர்​.​விசுவ​நாதன், பெங்​களூரு புகழேந்தி போன்ற பலரும் நின்​ற​னர். இந்த நிலை​யில் ஊழல் வழக்​கில் சிறை செல்​லும் முன்​பாக பழனி​சாமியை முதல்​வ​ராக்​கி​விட்​டுச் சென்​றார் சசிகலா.

சசிகலா தயவில் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பழனிசாமி, ஓபிஎஸ்ஸை கூட்டு சேர்த்துக் கொண்டு சசிகலா வகையறாக்களை கட்சியை விட்டே ஓரங்கட்​டி​னார். கட்சியின் ஒருங்​கிணைப்​பாளராக ஓபிஎஸ்ஸும் இணை ஒருங்​கிணைப்​பாள​ராகவும் முதலமைச் சராகவும் பழனிசாமியும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் வலம் வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ விவகாரம் பூதாகரமாக வெடித்​ததால் ஓபிஎஸ்​ஸையும் அவரது விசுவாசிகளையும் கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி. இதையடுத்து, பழனிசாமிக்கு எதிராக இரண்டாம் தர்மயுத்​தத்தைத் தொடங்​கினார் ஓபிஎஸ். இதற்கு நடுவே, கட்சியின் பொதுக்​குழுவால் பொதுச்​செய​லாளராக அங்கீகரிக்​கப்பட்ட பழனிசாமி, “இனி எந்தக் காலத்​திலும் ஓபிஎஸ்​ஸுக்கு அதிமுக-வில் இடமில்லை” என அறிவித்​தார்.

இதனால், மீண்​டும் அதி​முக-வுக்​குள் என்ட்ரி ஆவதற்​காக பாஜக-​வின் தயவை நாடி​னார் ஓபிஎஸ். அவர்​களும் இவரை வைத்து பழனி​சாமியை வழிக்​குக் கொண்​டுவர சில பல சித்து வேலை​களைச் செய்து பார்த்​தனர். எது​வும் எடு​ப​டாத நிலை​யில், 2026 சட்​டப் பேர​வைத் தேர்​தலுக்​காக பழனி​சாமி தரப்​புடன் கூட்​டணி ஒப்​பந்​தம் செய்து கொண்​டது பாஜக. ஓபிஎஸ், தினகரனை பழனி​சாமி சேர்க்க மறுத்​தா​லும் தங்​கள் கோட்​டா​வில் அவர்​களுக்கு தொகு​தி​களை ஒதுக்க பிளான் போட்​டது பாஜக. முதலில் இதற்​கும் முரண்டு பிடித்த பழனி​சாமி, கடைசி​யில் தினகரனுக்கு மட்​டும் ஓகே சொன்​னார். ஓபிஎஸ்​ஸுக்கு கேட்​டைத் திறக்க மறுத்​து​விட்​டார்.

இடைப்பட்ட காலத்தில் ஓபிஎஸ் பக்​கமிருந்த மனோஜ் பாண்​டியன், வைத்​தி​லிங்​கம், மருது அழகு​ராஜ் என ஒவ்​வொரு​வ​ராக திமுக-​வில் ஐக்​கிய​மா​னார்​கள். கடைசி​யாக, அவரால் ராஜ்ய சபாவுக்கு அனுப்பி வைக்​கப்​பட்ட தர்​மரும் அதி​முக-​வில் இணைந்​து​விட்​டார். இத்​தனை நடந்த பிறகும் இன்​ன​மும் எந்த முடி​வும் எடுக்​காமல் இருக்​கி​றார் ஓபிஎஸ். இதனால் அவரை இன்​ன​மும் நம்​பிக் கொண்​டிருக்​கும் வெல்​லமண்டி நடராஜன் போன்ற ஒரு சில நிர்​வாகி​களும் விரக்​தி​யின் விளிம்​பில் நிற்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்​பின் தென் மாவட்ட நிர்​வாகி ஒரு​வர் “அதி​முக-​வில் இணைவது அல்​லது பாஜக-​விடம் தனது, ‘அதி​முக தொண்​டர்​கள் உரிமை மீட்​புக் கழகத்​துக்​கு’ உள் ஒதுக்​கீடு பெற்​றுக் கொண்டு தனக்​கும் தனது ஆதர​வாளர்​கள் ஒரு சிலருக்​கு​மான சீட்​களை உறு​திப்​படுத்​திக்​கொள்​வது என நினைத்​தார் ஓபிஎஸ். ஆனால், பழனி​சாமி அதற்கு தடை​யாக இருக்​கி​றார். இனி​யும் காத்​திருந்து காலத்​தைக் கடத்​தாமல் விஜய்​யுடன் ஓபிஎஸ் கூட்​டணி அமைப்​பது தான் புத்​தி​சாலித்​தனம்.

திமுக-​வில் இணை​ய​லாம் என்​றும் சிலர் அவருக்கு யோசனை சொல்​கி​றார்​கள். அதி​முக-​வில் மூன்று முறை முதல்​வ​ராக இருந்​து​விட்டு திமுக-​வில் இணைவது என்​பது ஓபிஎஸ்​ஸின் அரசி​யல் எதிர்​காலத்​தைக் கேள்விக்​குறிய​தாக்​கும். என்​றாலும் எந்த முடி​வாக இருந்​தா​லும் காலம் தாழ்த்​தாமல் உடனடி​யாக எடுங்​கள். நாங்​கள் எல்​லாம் உங்​கள் பக்​கம் நிற்​கி​றோம் என்று சொல்​கி​றோம். ஆனாலும், அவர் என்ன நினைக்​கிறார் என்​பதை எங்​களால் ஊகிக்க முடியவில்​லை” என்​றனர்.

வரிசைகட்டிக் கிளம்பும் ஆதரவாளர்கள் - இன்னும் எதற்காகக் காத்திருக்கிறார் ஓபிஎஸ்?
அன்புமணியையும் திருமாவையும் வீழ்த்த விஜய்யுடன் கைகோக்கும் ராமதாஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in