“80 சதவீத அதிமுகவினர் திமுகவில் இணைவர்” - ஓ.பன்னீர்செல்வம் நம்புகிறார்

“80 சதவீத அதிமுகவினர் திமுகவில் இணைவர்” - ஓ.பன்னீர்செல்வம் நம்புகிறார்
Updated on
1 min read

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெறவுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணையும் விழாவில் சுமார் 80 சதவீத அதிமுக தொண்டர்கள் திமுகவில் இணைவார்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள், அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா வரும் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி, முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் எங்களை தாயன்புடன் அரவணைத்து திமுகவில் இணைத்துள்ளார். அவருக்கு எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதைய திமுக ஆட்சியில், அடித்தட்டு மக்களுக்கு எது தேவையோ அதைப் புரிந்து அவர்களுக்கான உதவியை முதல்வர் செய்து வருகிறார். எனவே, இந்த ஆட்சி தொடர வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் தங்களின் ஆதரவை தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த தேர்தலிலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றிபெறும். அதிமுக தொண்டர்கள் 80 சதவீதம் பேர் திமுகவில் இணைகிற நல்ல சூழல் உருவாகியுள்ளது. என் மீது குற்றம் சுமத்தும் அதிமுகவினருக்கு பதில் கூற வேண்டிய தேவையில்லை. நல்ல நிகழ்ச்சி திரு மங்கலமாக நடைபெறுவதற்காக திருமங்கலம் பகுதியில் இந்த இணைப்பு விழாவை நடத்த தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

“80 சதவீத அதிமுகவினர் திமுகவில் இணைவர்” - ஓ.பன்னீர்செல்வம் நம்புகிறார்
‘திமுக விருப்ப மனுவா? வேட்பு மனுவா?’ - திருநெல்வேலி திகு திகு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in