

பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் வாங்கப்பட்டது விருப்ப மனுவா? வேட்பு மனுவா? என்று, தற்போது அக்கட்சியினரே ஐயம் கிளப்புகிறார்கள். இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட தற்போதைய எம்.எல். ஏவும், திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளருமான அப்துல் வகாப் விருப்ப மனு அளித்துள்ளார். அவருடன் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார்.
இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகியிடம் பேசியபோது, ‘‘விருப்ப மனுவுடன் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளரின் பரிந்துரை கடிதம் வேண்டுமென்பது திமுகவின் சம்பிரதாய சட்டவிதி. ஆனால், அப்துல் வகாப் மனு அளித்தபோது, அவருடன் அமைச்சர் இருப்பது, விருப்பமனுவை வேட்புமனுவாக பார்க்க வைத்திருக்கிறது. திருநெல்வேலி மாநகர திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு இது தூபமிட்டுள்ளது.
மாநகராட்சியில் நிலவிய கோஷ்டி பூசலை தீர்க்க முடியாமல் அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவும், கே.என்.நேருவும் திணறியதையும், திமுகவின் செயல்பாட்டை பார்த்து பலரும் குமுறியதையும் மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள். இந்த கோஷ்டி பூசலால்தான் அப்துல் வகாபின் கட்சி பதவியை பறித்து முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கானிடம் கட்சி தலைமை ஒப்படைத்திருந்தது.
பின்னர், பொறுப்பு அமைச்சரின் கட்டளைகளை பொறுப்பாக நிறைவேற்றுவதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியின் பேரில் மீண்டும் கட்சி பொறுப்பு வகாப் வசம் அளிக்கப்பட்டது. இப்போது அதே அமைச்சரின் ஆசியுடன் மீண்டும் களமிறங்க அப்துல் வகாப் தயாராகிவிட்டார். அதற்காகவே வேட்புமனுவையும் அளித்துள்ளார். அவருடன் அமைச்சரும் இருப்பது உள்ளபடியே கட்சி சார்பில் போட்டியிட மனு அளித்துள்ள மற்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. தங்களுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்விகள் அவர்களிடையே எழுந்துள்ளது’’ என்று தெரிவித்தார்.