இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக கூட்டணிக்குத் துணிவாரா ஓபிஎஸ்?

இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக கூட்டணிக்குத் துணிவாரா ஓபிஎஸ்?
Updated on
2 min read

“கொள்கை வேறு கூட்டணி வேறு” என்று சொல்லிக் கொண்டே தேர்தலுக்காக மட்டுமான கூட்டணிகளை அமைக்கும் வேலையில் தமிழகத்தின் முக்கியக் கட்சிகள் ரகசியமாகவும் மறைமுகமாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. ஆனால், பாஜக-வை நம்பி அதிமுக-வை விட்டு வெளியே வந்த ஓபிஎஸ், இன்னமும் எந்தப் பக்கம் போவது என முடிவெடுக்க முடியாமல் ‘உள்ளே வெளியே’ ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார். இதற்கு நடுவில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை, சந்தடியில்லாமல் ‘மீட்புக் கழகமாக’ மாற்றிவிட்ட அவர், இன்று சென்னையில் அந்தக் ‘கழகத்தின்’ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

கடந்த மாதம், அமித் ஷா மூலம் பழனிசாமி தரப்புக்கு தூது அனுப்பினார் ஓபிஎஸ். ஆனால், “சசிகலா, தினகரன், ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக-வுக்குள் வேலை இல்லை” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்ட பழனிசாமி, “வேண்டுமானால் அவர்களை உங்களுக் கான ‘தனி ஏற்பாட்டில்’ கூட்டணியில் சேர்ப்பது பற்றி ஆலோசிக்கலாம்” என்று அமித் ஷாவுக்கு சேதி அனுப்பினார். இதில் அதிருப்தியடைந்து தான், மீட்புக் குழுவை ‘மீட்புக் கழகமாக’ மாற்றி விட்டதாக அதாவது கட்சியாக மாற்றிவிட்டதாக செய்தியைக் கசியவிட்டார் ஓபிஎஸ்.

இந்த நிலையில் தான், தங்களின் அடுத்தகட்ட நகர்வு குறித்து ஆலோசிக்க இன்று, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார் ஓபிஎஸ். இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பின் தென் மாவட்ட நிர்வாகி ஒருவர், “அமித் ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ், அப்படியே அண்ணாமலையையும் சந்தித்துப் பேசினார். பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் ஓபிஎஸ்ஸை கட்சிக்குள் சேர்த்துக் கொள்வதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிகிறது. இருந்தும் அந்த இரண்டு பேர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பிடிவாதம் பிடிக்கிறார் பழனிசாமி.

ஏற்கெனவே இது தொடர்பாக மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசிய ஓபிஎஸ், அடுத்து என்ன செய்யலாம் என்று கருத்துக் கேட்டார். அப்போது மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்களது கருத்தை தனித்தனியாக ஓபிஎஸ்ஸிடம் எழுதிக் கொடுத்தனர். தவெக கூட்டணியில் சேரலாம், திமுக கூட்டணியில் சேரலாம், டிடிவியுடன் இணைந்து செயல்படலாம் என மூன்று விதமான கருத்துகளை மாவட்டச் செயலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் கருத்துகளின் அடிப்படையில், இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் மீண்டும் ஆலோசிக்க உள்ளார் ஓபிஎஸ். இருந்தாலும் அவர் எந்த முடிவையும் உடனே அறிவிக்க மாட்டார் எனத் தெரிகிறது. டிசம்பர் 24-ம் தேதி புரட்சித் தலைவர் நினைவு நாள் என்பதால் அன்றைய தினம் சென்டிமென்டாக தன்னுடைய முடிவை ஓபிஎஸ் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, டெல்லியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் வந்தால், ஜனவரி 17 புரட்சித் தலைவர் பிறந்த நாள் வரைக்கும் தனது அறிவிப்பை அவர் ஒத்திப் போடலாம்.

பழனிசாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் ஓபிஎஸ், அதற்காக திமுக-வுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அப்படி கூட்டணி வைத்தால் எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும் அத்தனையிலும் வெற்றிபெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பை நிச்சயம் ஓபிஎஸ் தவறவிட மாட்டார் என்று நம்புகிறோம்” என்றார்.

இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக கூட்டணிக்குத் துணிவாரா ஓபிஎஸ்?
இலங்கையில் தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கும் வகையில் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in