

திண்டுக்கல்: கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தடுக்க, கலையரங்கம் பகுதியில் ‘பல்லடுக்கு வாகன நிறுத்தம்’ அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, 2024 மே 7-ம் தேதி முதல் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் விடுமுறை நாட்களில் சுற்றுலா இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. குறிப்பாக, வாகன நிறுத்துமிடம் இல்லாததால் சாலையோரங்களிலும், பேருந்து நிலையத்திலும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
இதனை தடுக்க, பல்லடுக்கு வாகன நிறுத்தும் (மல்டி லெவல் கார் பார்க்கிங்) அமைக்க வேண்டும் என்பது கொடைக்கானல் மக்கள், சுற்றுலா பயணிகளின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. அதன்படி, கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் இரண்டரை ஏக்கரில் வணிக வளாகத்துடன், 450 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ‘மல்டி லெவல் கார் பார்க்கிங்’ அமைக்க நகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையொட்டி, முதல்கட்டமாக தேவையான இடத்தை கையகப்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் இறங்கியுள்ளது. தற்போது கலையரங்கம் பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் நடத்தி வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
மல்டி லெவல் பார்க்கிங் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இங்குள்ள ஏராளான வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், இங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அதன் பிறகு, கடைகளை காலி செய்யவும், இடத்தை கையகப்படுத்த வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எந்த மாற்று ஏற்பாடும் செய்யாமல் கடைகளை காலி செய்ய வற்புறுத்தி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், வாழ்வாதாரத்தை பாதிக்கும் பல்லடுக்கு வாகன நிறுத்தம் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (செப்.23) ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். அதன்படி, புதன்கிழமை (இன்று) கலையரங்கம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.