

சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன்
சென்னை: ஜெம் வீரமணி வழக்கி்ல் கைதாகியுள்ள சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளரான வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் தரப்பில் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிலளி்க்க நீதிபதி எஸ்.பத்மா ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனுக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவித்து சென்னை பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில்மனுவில், ‘‘பிரவீனா சாலமன் என்பவர் கடந்த 2025 அக்.6 அன்று அளித்த ஆதாரங்களுடன் கூடிய புகாரின் அடிப்படையில் ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த ஆக,29 முதல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளனர், வீரமணி பல குழந்தைகளை சாந்தியின் வீட்டில் வைத்து தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.
இவர்கள் பெண்களின் தனிப்பட்ட செயல்களையும் வீடியோ எடுத்துள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் போக்சோ சட்டப்பிரிவுகளுடன், எஸ்சி, எஸ்டி சட்டத்தின்படியும் சட்டப்பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. சாந்தி தன்னிடம் உள்ள ஆதாரங்களை அழிப்பதற்கும், மறைப்பதற்கும் வீரமணி தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 24.63 லட்சத்தை சாந்திக்கு அனுப்பியுள்ளார்.
இதுபோன்ற குற்றச்செயல்களின் மூலம் சாந்தி, வீரமணியிடம் பெற்ற ரூ.2 கோடியை தனது கணவர் மகேந்திர சிம்மனின் வங்கி கணக்கு அனுப்பியுள்ளார். தங்களின் சுயலாபத்துக்காக சாந்தியும், மகேந்திர சிம்மனும் வீரமணியை பாலியல் குற்றத்தில் ஈடுபட தூண்டியுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்குட்படுத்தி மேலும் எத்தனை சிறுமிகள் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளையும் கண்டறிய வேண்டியுள்ளது.
இவர்களுக்கு ஜாமீ்ன் வழங்கினால் சாட்சிகளையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மேலும் வெளிநாடுகளுக்கு தப்பிவிடுவர் என்பதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது, என அதில் கோரியுள்ளனர். இந்த வழக்கு செப்.29 அன்று போக்சோ சிறப்புநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
போலீஸ் காவல் இன்று நிறைவு: ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகிய இருவரின் 3 நாள் போலீஸ் காவல் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜெம் வீரமணியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விரிவான விசாரணை நடத்தினர்.
எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்? இக்குற்றங்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது காவல்துறையினரின் கேள்விகளுக்கு சாந்தி அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளன.