

சென்னை: “மதுராந்தகம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதியை மீறி பேசியதாக முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திமுக மாநிலங்களவை உறுப்பினர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், இந்தியத்தலைமைத் தேர்தல் ஆணையர்ஞானேஷ் குமார் உள்ளிட்டோ ருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: மதுராந்தகம் தொகுதிக்கு வரும் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு செப்.9-ம் தேதி வெளியானதை அடுத்து, தொகுதி முழுவதும் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இது அனைத்துக் கட்சிகளுக்கும், பிரச்சாரம் செய்பவர்களுக்கும் முழுமையாகக் கட்டுப்படும்.
சமீபத்தில் ஜெம் வீரமணி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபருடன் திமுகவுக்கோ அல்லது அதன் தலைவர்களுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்தச் சம்பவத்தை திமுகவுடன் தொடர்புபடுத்திப் பேசக் கூடாது என்றும், அது விசாரணையைப் பாதிக்கும் என்றும் உயர்நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இது தொடர்பான செய்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் ஊடகங்களுக்கு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
திட்டமிட்டே பேசுகின்றனர்: நீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தல்களையும், தேர்தல் மாதிரி நடத்தை விதிகளையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தொடர்ந்து திமுக மீது அவதூறு பரப்பும் வகையில் பேசி வரு கின்றனர்.
தேர்தல் நடத்தை விதியின்படி, பிற கட்சிகள் மீதான விமர்சனங்கள் அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளையோ அல்லது தனிப்பட்ட விமர்சனங்களையோ முன்வைக்கக் கூடாது. ஆனால், தவெக தலைவர்கள் திட்டமிட்டே இந்த விதிமுறைகளை மீறிப் பேசி வருவதால், மாதிரி நடத்தைவிதியின் கீழ் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை மீறி திமுக குறித்து அவதூறாகப் பேசுவது, மதுராந்தகம் தொகுதியில் வாக்காளர் களுக்குப் பணம் பட்டுவாடா செய்த வீடியோ, அரசு வாகனங்களை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்துவது, பள்ளி மாணவர்களை பிரச்சாரத்தில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் கொடுத்திருக்கிறோம்.
தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதுபோன்ற அத்துமீறல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும். ஜெம் வீரமணியின் மீதான வழக்கை மூடி மறைப்பதற்கு இந்த அரசு நான்கு முறை முயற்சித்திருக்கிறது. நீதியரசர் கோபப்பட்டு ‘இதுபோன்ற அநியாயத்தை நாங்கள் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது, உடனடியாக வீரமணியை கைது செய்ய வேண்டும்’ என்று ஆணையிட்ட பிறகுதான் 29-ம் தேதி கைது செய்தார்கள்.
விஜய் அரசு, விஜய் அரசின் காவல்துறை நேரடியாக வீரமணியைக் கைது செய்யவில்லை. நீதிபதியினுடைய கட்டாயத்தின் பேரில் கைது செய்தது. இதேபோல் காங்கிரஸ் பிரமுகர் புகார் அளித்ததாக சொல்கிறார். ஆனால் அந்தப் புகார் பதிவு செய்யப்படவில்லை. ஒருவேளை அவர் சொல்வதே நியாயமாக இருக்கட்டும். அவர் ஒரு கட்சியினுடைய பிரமுகர், என்ன செய்திருக்க வேண்டும். அவரால் இதை பிரச்சினையாக்க முடியுமா முடியாதா? அதாவது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். இல்லை அரசுடன் பேசலாம். ஏன் பேசவில்லை. இன்று வந்து ஏன் பேசுகிறார்?” என்றார்.