“ஒட்டுமொத்த தமிழக மக்களும் போராடினால் தான் மேகேதாட்டு திட்டத்தை நிறுத்துவார்கள்” - வைகோ

வைகோ | கோப்புப் படம்
வைகோ | கோப்புப் படம்
Updated on
1 min read

ஆண்டிபட்டி: “மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக தமிழகத்தில் ஒட்டுமொத்த இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து போராட வேண்டும். அப்போதுதான் அங்கு அணை கட்டுவதை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு வரும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 13-ம் தேதியில் இருந்து மாவட்டந்தோறும் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன்படி இன்று (சனிக்கிழமை) தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எஸ்எஸ்.புரத்தில் இப்பணியில் ஈடுபட்டார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சீமை கருவேல மரங்கள் நிலத்துக்குள் 50 முதல் 100 அடி வரை ஊடுருவி நிலத்தடி நீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களில் பறவைகள் கூடுகட்டாது. முட்டையிடாது. நிழலில் ஆடு, மாடுகள் தங்கினால் சினைகூட பிடிக்காது. அவ்வளவு விஷத்தன்மை கொண்ட மரம் இது. ஆகவே, தமிழக அரசும், பல்வேறு அமைப்புகளும் இந்த கருவேல மரங்களை அகற்ற முன்வர வேண்டும்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை ஏற்படுத்த இது மட்டுமே போதாது. அண்ணா எப்படி மத்திய அரசை எதிர்த்து எழுச்சியை ஏற்படுத்தினாரோ, அதேபோல் தமிழகத்திலும் ஒட்டுமொத்த மக்கள் இணைந்து போராட்டம் நடத்தி மத்திய அரசை தமிழகம் எதிர்க்கிறது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை ஓரளவு தடுக்க முடியும்.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதை ஊக்குவிப்பதே மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும்தான். ஆகவே இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை மக்கள் ஸ்தம்பிக்க செய்ய வேண்டும், இளைஞர்கள், பொதுமக்கள் எப்போது கொந்தளிக்கிறார்களோ அப்போதுதான் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை நிறுத்தும் எண்ணம் மத்திய அரசுக்கு வரும்” என்று அவர் தெரிவித்தார்.

வைகோ | கோப்புப் படம்
“நேரலை நிறுத்தம், பேரவை விவாத வீடியோ ‘எடிட்’ மிகப் பெரிய தவறு” - உதயநிதி காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in