

விடுமுறை நாளான நேற்று சிவகாசி - விருதுநகர் சாலையில் வாடிக்கையாளர் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்ட பட்டாசு கடை.
சிவகாசி: ஆன்லைன் விற்பனை அதிகரிப்பால் சிவகாசியில் உள்ள கடைகளில் பட்டாசு விற்பனை குறைந்துவிட்டதாக விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சிவகாசியில் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 3,500-க்கும் அதிகமான பட்டாசு விற்பனை கடைகளும் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே நிரந்தர பட்டாசு கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது.
தீபாவளியை முன்னிட்டு அதிக தள்ளுபடி, புது ரகப் பட்டாசுகளை நேரடியாக வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பட்டாசு வாங்குவதற்காக ஏராளமானோர் சிவகாசிக்கு வருவது வழக்கம்.
சிவகாசி பட்டாசு கடைகளில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தில் சிறப்பு பூஜையுடன் பட்டாசு விற்பனை தொடங்கும். அன்றைய தினத்திலிருந்து பெரு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கவும், தொழில்துறையினர் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் கிஃப்ட் பாக்ஸ் ரக பட்டாசுகளை ஆர்டர் கொடுக்க தொடங்குவர். இதைத்தொடர்ந்து ஆடிப்பெருக்கு முதல் தீபாவளி வரை சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை மும்முரமாக நடைபெறும். ஆயுத பூஜைக்கு பின்பு சில்லறை விற்பனையும் களைகட்டும்.
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல், தற்போதும் ஆன்லைன் விற்பனை களைகட்டியது. மேலும், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தொடர்மழை பெய்து வருகிறது.
இதுபோன்ற காரணங்களால் சிவகாசியில் உள்ள பெரும்பாலான கடைகள், வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில் கடைகளில் வியாபாரம் குறைந்துள்ளதால் விற்பனையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறியதாவது: ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளபோதும், தடையின்றி ஆன்லைன் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆன்லைனில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரத்தை பார்த்து பணம் செலுத்துபவர்களுக்கு தரமில்லாத பட்டாசுகளை கொடுத்து ஏமாற்றுகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதாக பணம் பெற்று, பட்டாசு அனுப்பாமல் மோசடி செய்ததாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் விற்பனை காரணமாக சிவகாசியில் 40 சதவீதம் வரை பட்டாசு சில்லறை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பட்டாசு விற்பனையைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.