

அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
சேலம்: ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் இடைத்தரகர்களை நாடி ஏமாற வேண்டாம் என வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியது:
பத்திரப்பதிவு ஆன்-லைன் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளதால் இடைத்தரகர்களுக்கு இங்கே இடம் கிடையாது. பத்திர எழுத்தர்களின் பணி தொடர்ந்து இருக்கும். ‘பிரசன்ட்லெஸ்’ முறையில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யும்போது, அந்த ஆவணத்தைத் தயாரித்த பத்திர எழுத்தரின் விவரம் ‘வாட்டர்மார்க்’ மூலம் அதில் இடம்பெறும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்து வருகிறோம். மேலும், 1997-ம் ஆண்டிற்குப் பிறகு வழங்கப்படாமல் இருந்த பத்திர எழுத்தர் உரிமங்களைப் புதிதாக வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை வந்த பிறகு, எங்கெல்லாம் அதிக வேறுபாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் ஆராய்ந்து, அதைச் சமன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.
பத்திரப்பதிவு செய்ய பொதுமக்கள் நேரடியாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தால் அதிகாரிகளே ஆன்-லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய அனைத்து உதவிகளையும் செய்வார்கள். விரைந்து வேலை முடிய வேண்டும் என்பதற்காகப் பொதுமக்கள் இடைத்தரகர்களை நாடி ஏமாற வேண்டாம். அரசு நிர்ணயித்த கட்டணத்தைச் செலுத்தினால், அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் ஆவணங்கள் கைக்குக் கிடைத்துவிடும். முடிந்தவரை அன்றைய தினமே ஆவணங்களைத் திருப்பித் தர அறிவுறுத்தியுள்ளோம்.
வரி செலுத்துவோரை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.