

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை தனியார் தொழிற்சாலையில் பர்னஸ் கொதிகலன் வெடித்ததில், வடமாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; 9 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோருக்கு நிதியுதவி வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், ‘ஜெயின் ரிசோர்ஸ் ரிசைக்கிளிங் லிமிடெட் (யுனிட் 2)’ என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இத்தொழிற்சாலையில், பழைய ஈயம், செம்பு உள்ளிட்ட உலோகங்களை பிரித்து எடுத்து உருக்கி கட்டிகளாக உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில், 800 தொழிலாளர்கள் 3 ஷிப்ட்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், தொழிற்சாலையின் பர்னஸ் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 10 பேர் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பலத்த சத்தத்துடன் பர்னஸ் கொதிகலன் வெடித்து சிதறியது.
இதனால், தொழிற்சாலையின் மேற்கூரை உட்பட சுமார் 40 மீட்டர் சுற்றளவுள்ள பகுதி கடுமையாக சேதமடைந்தது. இந்த விபத்தில், பிஹார் மாநிலத்தை சேர்ந்த ரவிரஞ்சன் (24) என்ற தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடன் பணியிலிருந்த பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஓம்குமார் (22), பூசன்குமார் (25), ராஜாபப்பு (26), அரவிந்த்குமார் (26), ரன்வீர்குமார் (27), பிரின்ஸ்குமார் (27), ரஞ்சித்குமார் (35), கமலேஷ் (40), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிம்பர் சிங் (24)ஆகிய 9 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து, தகவலறிந்த கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடம் விரைந்து மீட்பு பணி மற்றும் தீப்பிடித்த பகுதிகளில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணியில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்றவர்களில், 7 பேர் மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் சிறுணியம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தங்குமிடங்களுக்கு திரும்பியுள்ளனர்.
மேலும், சிறுணியம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 தொழிலாளர்களை நேற்று செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் குமார், ஆட்சியர் கவிதா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிகழ்வின் போது, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ எஸ்.விஜயகுமார், பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், மாவட்ட சுகாதார அலுவலர் (திருவள்ளூர்) பிரியாராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொழிற்சாலையில் பல்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அவரது உடலை அரசு செலவில் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். படுகாயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.