

சென்னை: சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: ஏப்ரல் 1-ம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் தமிழகத்தில் சில இடங்களில் உயர உள்ளது.
அதாவது, தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், வானகரம், கிருஷ்ணகிரி, மதுரை,நாங்குநேரி, வாணியம்பாடி, விராலிமலை, கப்பலூர், கனியூர், ஆத்தூர், தேனி உள்ளிட்டதேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இந்தகட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
வாகன வகையைப் பொறுத்து சுமார் ரூ.5 முதல் ரூ.100 வரைகட்டண உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் தாக்கம் பொதுப் போக்குவரத்து துறையில் இன்னும் அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, தனியார் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் நீண்ட தூரம் பயணிக்கும் போது பல சுங்கச் சாவடிகளை கடக்க வேண்டியிருப்பதால், தினசரி இயக்கச் செலவில் சுங்கச் சாவடி கட்டணம் பெரிய சுமையாக மாறி உள்ளது.
சுங்கச் சாவடி கட்டண உயர்வாள் போக்குவரத்து செலவு அதிகரிக்கும் போது, அதன் தாக்கம் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் காணப்படுகிறது. எனவே, சுங்கச் சாவடி கட்டண உயர்வு என்பது சாலைப்பயணிகளுக்கான பிரச்சினை மட்டுமல்லாது, பொதுமக்களின் வாழ்க்கைச் செலவையும், நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளையும் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக மாறுகிறது.
மேலும், அதிகரிக்கும் சுங்க கட்டணங்களால் சில வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை தவிர்த்து, உள்ளூர் சாலைகளை பயன்படுத்தும் நிலை உருவா
கும் அபாயமும் உள்ளது. இதனால், கிராமப்புற சாலைகளில் நெரிசல் அதிகரிப்பு, சாலை சேதம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து மக்கள் மற்றும் போக்குவரத்து துறைக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.