

சென்னை: “பயணிகள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்” என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை நேற்று சந்தித்த பிறகு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
இது சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், தற்போது, ஆம்னி பேருந்துகளுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.150 ஆக உள்ளது. இதை ரூ.500 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கட்டணத்தை இவ்வளவு அதிகமாக உயர்த்தக் கூடாது. மேலும், போக்குவரத்துத் துறையின் அனைத்து சேவைகளும் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட வேண்டும்.
இதன்மூலம், இடைத்தரகர்கள் மற்றும் தேவையற்ற தாமதங்களை தவிர்க்க முடியும். குறிப்பாக, வாகனங்களுக்கான சிறப்பு எண் ஒதுக்கீட்டு நடைமுறையை ஆன்லைன் மூலம் செயல்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம்.
முன்பு சிறப்பு எண் பெற டீலர்கள், ஏஜென்ட்டுகள் உள்ளிட்டோரின் உதவியை நாட வேண்டி இருந்தது. அதற்காக, ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவாகி வந்தது. தற்போது, எந்த இடைத்தரகரும் இல்லாமல் நேரடியாக விண்ணப்பித்து பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. போக்குவரத்துத் துறையில் லஞ்சம் மற்றும் மறைமுக செலவுகள் குறைந்து, சேவைகள் விரைவாகவும், வெளிப்படையாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அனைத்து சேவைகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டால் இந்த மாற்றம் மேலும் வலுப்பெறும்.
ஒரு பேருந்தில் பயணிக்க வேண்டிய 40 பேர் தற்போது தனித்தனி கார்கள் அல்லது வாடகை வாகனங்களில் கிளாம்பாக்கம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசலும், சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரிக்கிறது.
எனவே, கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் திறப்பது அவசியம். ஆம்னி பேருந்து கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கு தனி அனுமதி மற்றும் கட்டண நிர்ணய முறை உருவாக்கப்பட வேண்டும். கட்டண ஒழுங்குமுறையை கொண்டு வர அரசுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.
ஆம்னி பேருந்து சேவைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. அவற்றுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறிஉள்ளார்.