

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருடன் நடத்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் 18 நாட்களுக்கு பிறகு நேற்றுமுதல் மீண்டும் இயக்கப்பட்டன.
தமிழகத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கேரள மாநில எல்லையை அடைந்த தமிழக ஆம்னி பேருந்துகளுக்கு அந்த மாநில போக்குவரத்து அதிகாரிகள், ரூ.70 லட்சம் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து நடத்திய போராட்டத்துக்கு, மற்ற மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்தனர். சென்னை - திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்க வேண்டிய 230 ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஆணையர் ஆகியோரை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து வந்தது.
இதற்கிடையே, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இடையேயான, ஆம்னி பேருந்துகளின் சேவை 18 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியதாவது: மத்திய அரசால் உருவாக்கப்பட்ட `ஆல் இந்தியா டூரிஸ்ட்' பர்மிட்டின்படி, தமிழகத்தில் இன்றுவரை அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கின்றனர். எனவே, நாங்களும் வசூலிக்கிறோம் என கேரள, கர்நாடக போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். இதைக் கண்டித்து நாங்கள் வெளிமாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளை நிறுத்தினோம். எங்களது கோரிக்கைகள் குறித்து தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் மற்றும் போக்குவரத்து ஆணையரிடம் பேச்சு நடத்தப்பட்டது.
ஆம்னி பேருந்துகள் நிறுத்தத்தால், தினமும் ரூ.4 கோடி வரை இழப்பு ஏற்பட்டது. இதுவரை ரூ.84 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும், முதல்வரை சந்தித்து ஆலோசனை பெற்று, நல்ல முடிவை ஏற்படுத்தித் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, பயணிகள், சபரிமலை ஐயப்ப பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு வெளிமாநில ஆம்னி பேருந்துகளை 28-ம் தேதி (நேற்று) மாலை முதல் மீண்டும் இயக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.