

சென்னை: சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ‘டிட்வா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ‘‘அனைத்து துறையினரும் முறையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். முகாம்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தயாராக இருக்க வேண்டும். குடியிருப்பு பகுதியில் வெள்ளநீரை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புயல் காற்றால் மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டால், அதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
ஆய்வின்போது தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார், எரிசக்தி துறை செயலர் மங்கத் ராம் சர்மா, வருவாய்த் துறை செயலர் அமுதா, நில நிர்வாக ஆணையர் பழனிசாமி, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குநர் முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், ‘‘அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சென்னையிலும் அதிக மழை பெய்யும் என்று கூறியுள்ளனர். தேவையான இடங்களில் முகாம்களும், அங்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தண்ணீர் திறந்துவிடும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தார்.