நாமக்கல்: கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஓமன் நாட்டில் இந்திய முட்டைகளை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 6 கோடி முட்டைகளின் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினமும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. மேலும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கும், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதம்தோறும் 3 கோடி முதல் 6 கோடி முட்டைகள் வரை ஓமன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. தற்போது இந்திய முட்டை இறக்குமதிக்கு அந்நாடு முழுமையாகத் தடை விதித்துள்ளதால் முட்டை இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, கால்நடை மற்றும் விவசாயப் பண்ணையாளர்கள், வர்த்தகர்கள் சங்கத் தலைவரும், முட்டை ஏற்றுமதியாளருமான டாக்டர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் சில கறிக்கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்பட்ட கோழிகள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் பகுதியில் நவீன கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. வெளிநபர்கள் மற்றும் வாகனங்கள் பண்ணைக்குள் நுழையும்போது கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. முழுமையான உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதால், நாமக்கல் மண்டலத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பில்லை.
எனவே, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணைத் தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நாமக்கல் மண்டலத்தை தனி முட்டை ஏற்றுமதி மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓமன் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முட்டை இறக்குமதிக்கான தடையை நீக்கி, மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கேரளத்தில் இருந்து கோழி இறைச்சி, முட்டை கொண்டு வர தடை
தென்காசி/ நாகர்கோவில்: கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க, கேரள எல்லைப்பகுதியில் உள்ள தென்காசி மாவட்டம் புளியரை, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளத்தில் இருந்து கோழிகள், வாத்துகள், முட்டை, இறைச்சி, கோழி எச்சங்கள், கோழித் தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை ஏற்றி வரும் வாகனங்கள் கேரளத்துக்கே திருப்பி அனுப்பப்படுகின்றன.